×

மேற்கு மாம்பலத்தில் நள்ளிரவு: வீடுகள் முன்பு பண மழை

* நோய் தொற்று ரூபாய் நோட்டுகள் வீச்சா?
* சைக்கிளில் வந்த 2 ஆசாமிகளுக்கு வலை

சென்னை: மேற்கு மாம்பலத்தில் வீட்டு வாசல்களில் கொரோனா தொற்று  ரூபாய் நோட்டுக்களை வீசியதாக சந்தேகப்படும் மர்ம நபர்கள் குறித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை முழுவதும் ஊரங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் மேற்கு மாம்பலம் மாணிக்கம் தெருவில் நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஒவ்வொரு வீட்டின் நுழைவு வாயின் முன்பு 20  மற்றும் 50 ரூபாய் நோட்டுகளாக வீசிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், வீடுகள் முன்பு வீசப்பட்ட ரூபாய் நோட்டுக்களை யாரும் எடுக்க வேண்டாம். அதில் கொரோனா தொற்று இருக்கலாம் என்று ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி போலீசார் மாணிக்கம் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு பெற்று வீடுகளில் ரூபாய் நோட்டுக்களை வீசி சென்ற 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுதவிர ரூபாய் நோட்டுக்கள் சாலையில் கிடந்தால் அதை உடனே பொதுமக்கள் யாரும் எடுக்க வேண்டாம். அதில் நோய் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் போலீசார் எச்சரிச்கையும் விடுத்துள்ளனர். நோய் பரப்பும் வகையில் திட்டமிட்டு வீடுகளில் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஆ ய்வுக்கு அனுப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தால் மேற்கு மாம்பலம் பகுதியில் பதற்றம் நிலவியது.

Tags : West Mambalam ,houses , West Mambalam, money
× RELATED சென்னை மேற்கு மாம்பலத்தில் 840 மதுபாட்டில்கள் பறிமுதல்