×

ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு முப்படையினர் நன்றி தெரிவிப்பு: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்,  போலீசாருக்கு முப்படை சார்பில் போர் விமானங்கள் அணிவகுப்பு, ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவுதல், போர் கப்பல்களில் சைரன் ஒலிக்க  செய்தல் மூலமாக நன்றி தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் முன்கள போர்  வீரர்களாக இருந்து நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு முப்படை சார்பில் நன்றி தெரிவிக்கப்படும் என முப்படை தலைமை தளபதி  பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.இதன்படி, நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் போர்  விமானங்கள் அணிவகுப்பு நடத்தின.

தொடர்ந்து, போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. டெல்லி ராஜபாதை மீது சுகாய், மிக்-29, ஜாகுவார் போர் விமானங்கள் அணிவகுப்பு நடத்தின. இதே போல, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத்,  பெங்களூரு, சென்னை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமானப்படை விமானங்கள் அணிவகுப்பு நடத்தியும், ஹெலிகாப்டர்  மூலம் மலர்தூவியும் மரியாதை தெரிவிக்கப்பட்டது. முக்கிய மருத்துவமனைகள் முன்பாக பேண்ட் வாத்தியங்கள் வாசித்தும் முப்படையினர் மரியாதை  தெரிவித்தனர்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடலோர காவல்படை கப்பல்கள் கரையருகே நிலைகொண்டு கொரோனா போர் வீரர்களை கவுரவித்தன.  கடற்படையின் மேற்கு பிரிவைச் சோ்ந்த 5 கடற்படை கப்பல்களிலும், கிழக்கு பிரிவைச் சேர்ந்த 2 போர் கப்பல்களிலும் இரவு 7.30 மணி முதல் 11.59  மணி வரை விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டது. அனைத்து கப்பல்களிலும் இரவு 7.30 மணியளவில் சைரன் ஒலியுடன், ஒளிப் பிழம்புகள் எரியச்  செய்யப்பட்டன. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘கோவிட்-19ஐ எதிர்த்து முன்களத்தில் நின்று போராடும் வீரர்களுக்கு சல்யூட்.  அவர்களுக்கு நமது ஆயுதப் படையினரால் மிகச்சிறந்த மரியாதை அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அமெரிக்காவிலும் மரியாதை
அமெரிக்காவிலும் வாஷிங்டன், மேரிலாண்ட், விர்ஜினியா நகரங்களில் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக போர் விமானங்கள்  அணிவகுப்பு நடத்தின. ‘‘கண்ணுக்கு தெரியாத எதிரியை எதிர்த்து போராடும் அனைவருக்கும் போர் விமானங்கள் மூலம் சிறப்பான நன்றி  தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என அதிபர் டிரம்ப் பாராட்டி உள்ளார்.



Tags : Modi ,Thiruvananthapuram ,barricade workers ,Corona , Helicopter, Flower Sprinkler, Corona, PM Modi
× RELATED தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு...