×

தந்தை அமைச்சராக இருக்கும் துறையில் மகன்களின் நிறுவனத்துக்கு சலுகையா? துணை முதல்வர் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: ‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில், அவரது இரண்டு மகன்களும் இயக்குநர்களாக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் பிராஜக்ட் ஒன்றிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்’’ என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்களான, அதிமுகவின் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் இயக்குநர்களாக இருக்கும் “விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனம், திருப்பூரில் செய்யவிருக்கும் தங்களது “ரியல் எஸ்டேட் பிராஜக்ட்டுகளைப் பதிவு செய்து கொள்ள, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்திடம் கடந்த ஜனவரி 20ம் தேதியன்று விண்ணப்பித்திருப்பது, அதிலும் தமது முகவரியாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முகவரியை குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அ.தி.மு.க. அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட “தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் என்னும் அமைப்பு ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கி வருகிறது. தமது தந்தை அமைச்சராக இருக்கும் துறையின் கீழ் வரும் குழுமத்திடம், மகன்கள் இருவரும் தாங்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்தின் கட்டுமானத் தொழிலைப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பித்துள்ளது - ஆட்சியையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் அப்பட்டமான முயற்சியாகும். ஆதாய முரணாகும். தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதையும் மறந்து விட்டு, தமது சகோதரரை இணைத்துக் கொண்டு, இன்னும் ரியல் எஸ்டேட் கம்பெனியில் இயக்குநராகத் தொடரும் ரவீந்திரநாத் குமார் - தங்களது தந்தையின் துறையிலேயே, தமக்கு சாதகமான உத்தரவு பெற முயற்சிப்பதும், அதற்கு தந்தையின் துறை அனுமதி கொடுப்பதும், இன்னொரு லஞ்ச ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம் என்பதில் சந்தேகமில்லை.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “என் மகன்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்” என எதிர்க் கேள்வி கேட்டாலும் கேட்கலாம். ஆகவே ஓ.பன்னீர்செல்வம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில், இந்தப் பிரச்சினை குறித்துத் தமிழக மக்களுக்குத் தக்க விளக்கம் அளித்திடக் கடமைப் பட்டிருக்கிறார். இந்தக் கடமையிலிருந்து அவர் சப்தமில்லாமல் ஒதுங்கிக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘கொரோனா காலத்திலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சரியா? முறையா? நியாயமா? இதனால் தமிழக அரசின் மதிப்பு தான் குறையும். விலைவாசி உயரும், மக்களின் கவலைகள் கூடும். எனவே வரி உயர்வை திரும்பப் பெற்று மக்களுக்கு உதவியாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.



Tags : minister ,company ,field ,sons ,Deputy Chief Minister ,MK Stalin , Father Minister, Sons, Company, Deputy Chief Minister, MK Stalin
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...