×

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவிமரியாதை: மருத்துவத் துறையினர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் கொரோனாக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மீது  நேற்று ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.  கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த 41 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் கையில் கடந்த 6 வாரங்களாக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் களப்பணியில் உயிரைப் பற்றி கவலைப்படாமல் மருத்துவர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர்கள்,  செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு முப்படைகள் சார்பில் நன்றி  தெரிவிக்கும் விதமாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் முன்களப் போராளிகள் மீது மலர்கள் தூவப்படும் என்று முப்படைகளின் தலைமை  தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சென்னையில் கொரோனா வைரஸ்  பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளான சென்னை  ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ துறையினர்மீது ஹெலிகாப்டர் மூலம்  மலர் தூவி கவுரப்படுத்த  முடிவு எடுக்கப்பட்டது.   இதையடுத்து சென்னை அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை  தளத்தில் இருந்து நேற்று காலை ஹெலிகாப்டர் புறப்பட்டது. அதற்கு முன்பாக  சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் டீன் ஜெயந்தி  தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை  பணியாளர்கள்  என அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து அணிவகுத்து நின்றனர்.

அவர்கள் மீது காலை 10.25 மணியளவில் ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ வீரர்கள் பூக்களை  தூவியபடி சென்றனர். அவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை ஒருவரையொருவர் பார்த்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் டாக்டர்கள்,  செவிலியர்களின் சேவையை பாராட்டி கடற்படை அதிகாரி சியாம் சுந்தர் டீன்  ஜெயந்திக்கு பூங்கொத்துடன் கேடயமும், வாழ்த்து மடல் வழங்கினார். மேலும்  ராணுவ அதிகாரி செவிலியர்களுக்கு 2 பரிசு வழங்கினார். இதையடுத்து டீன்  ஜெயந்தி நிருபர்களிடம் கூறும்போது: ராணுவத்தினர் எங்கள் மீது பூ தூவியது  வீரதீர விருது கிடைத்தது போன்ற உணர்வை அளித்து உள்ளது. இது எங்களுக்கு  கிடைத்த மிகப்பெரிய கவுரவம். கொரோனாவுக்கு எதிரான போரில் இன்னும் உத்வேகமாக  பணியாற்றுவதற்கு இந்த மரியாதை எங்களுக்கு உந்து சக்தியாக அமைந்து உள்ளது  என்று கூறினார்.

இதைப்போன்று  ஓமந்தூரர் அரசு பன்னோக்கு மருத்துவமனை  வளாகத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனர், டீன் நாராயணபாபு தலைமையில்  டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சமூக  இடைவெளியை கடைபிடித்து அணிவகுத்து நின்றனர். அவர்கள் மீது காலை 10.30 மணியளவில்  ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை பொழிந்தது.  இதையடுத்து டீன் நாராயணபாபு  நிருபர்களிடம் கூறுகையில்: எங்களின் சேவைக்கு கிடைத்த இந்த அங்கீகாரம்  மறக்கமுடியாத ஒன்றாகும். மருத்துவர்களை கவுரவித்த ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  

அதைப்போன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை  உள்ளிட்ட கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை அளிக்கப்படும் அனைத்து மருத்துவமனைகள்  மீதும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன. இந்த நிகழ்ச்சியை  மருத்துவமனை அருகே இருந்தவர்கள் ஆச்சரியத்துடனும், கைதட்டியும்  மகிழ்ந்தனர்.


Tags : spraying ,nurses ,doctors ,Army ,department ,Corona , Corona, Doctors, Nurses, Military Helicopter, Medical Department
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...