சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தமிழகத்தில் 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தவிப்பு: அரசிடம் இருந்து கோரிக்கை வராததால் அமைதி காக்கும் ரயில்வே

சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு, சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வேயிடம் தற்போது வரை கோரிக்கை வைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஊரடங்கால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தங்கி வேலை செய்யும் ஜார்க்கண்ட், பீகார் உள்பட பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வேளை உணவுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அரசு, வெளிமாநில தொழிலாளர்களை சமூக நலக்கூடம், திருமண மண்டபங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் அது போன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றுமுன்தினம் பல்லாவரம், கிண்டி, வேளச்சேரி, முகப்பேர் ஆகிய பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் 2 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலும் எந்த வசதிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது அவர்களால் தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் வேறு வழியின்றி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் போராட்டத்திற்கு பின்னர் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மாநில அரசு கோரினால் மட்டுமே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயிவே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மீண்டும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் அந்த தேதி வரை மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்படி, பிற மாநிலத்தில் உள்ளவர்கள், வெளி மாநில தொழிலாளிகள், சுற்றுலா சென்றவர்கள், மாணவர்கள் என பலரை ஏற்றி வர மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில்கள் பொறுமையாக செல்லும். மாநிலங்களின் விதிகளை பின்பற்றி அழைத்து வரப்படுவார்கள். அனைத்து சோதனைகளும் முடித்து தனித்தனியாக பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள். யாரேனும் வர வேண்டி இருந்தால், சம்பந்தப்பட்ட அரசை தொடர்புகொள்ள வேண்டும். மேலும், அத்தியாவசிய சரக்கு ரயில்கள் எப்போதும் போல் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: