×

பணமதிப்பு நீக்கம்.. ஜிஎஸ்டி.. பிஎஸ் 6… கொரோனா என அடுத்தடுத்து மரண அடி பாதியில் நின்ற ‘பயணம்’ தொடருமா?

* மீள முடியாமல் தவிக்கிறது ஆட்டோமொபைல் துறை
* விற்பனை சரிவால் பல லட்சம் பேர் வேலை இழப்பு

சென்னை: திக்குத்தெரியாத காட்டில் தவிப்பது போன்ற நிலையில் ஆட்டோமொபைல் துறை உள்ளது. நாட்டின் வேலை வாய்ப்புக்கு மிக முக்கிய பங்களிப்பு வழங்கும் இந்த துறையின் ஆண்டு வர்த்தகம் சுமார் 10,000 கோடி டாலர் (7,60,000 கோடி). நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்த துறையின் பங்களிப்பு 50 சதவீதம். ஆனால் தற்போது, தொடர்ந்து விற்பனை சரிவு, வேலை இழப்பு என மோசமான  நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  கடந்த 2001 முதல் 2010 வரை இந்த துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம்  15.67 சதவீதமாக இருந்தது. இதில் 10 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியும் அடங்கும்.  அதன்பிறகு 2000 முதல் 2015 வரை ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 23 சதவீதமாக  இருந்து.

ஆனால்,  2016ம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பு நீக்கம், 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அறிமுகம் மற்றும்  பாதுகாப்பு விதிகள், எரிபொருள் விலையேற்றம் என கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டோமொபைல் துறை கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. வழக்கமாக நிதியாண்டு இறுதியில் வாகன விற்பனையில் ஏற்றம் காணப்படும். ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் கூட வாகன விற்பனை கடும் சரிவை அடைந்தது. சரிவு 40 சதவீதம் முதல் 88 சதவீதம் வரை இருந்தது. புகை மாசுவை குறைக்கும் வகையில் பிஎஸ் 4 தர நிலையில் இருந்து பிஎஸ் 6 தர நிலைக்கு இந்திய ஆட்டோமொபைல் துறை மாறியது. திட்டமிட்டபடி, கடந்த ஏப்ரல் 1 முதல் விற்பனை தொடங்கியிருக்க வேண்டும். கொரோனாவால் ஒரு மாதம் முன்பாகவே உற்பத்தி நிறுத்தப்பட்டு, நிதியாண்டு தொடக்க விற்பனை பாதிக்கப்பட்டது. முன்னதாக, பிஎஸ் 4 வாகனங்களை விற்க அறிவித்த மெகா தள்ளுபடிகளும் பலன் தரவில்லை.

வாகன உற்பத்தி துறை உதிரி பாகங்களுக்கு சீனாவையே நம்பியுள்ளது. சீனாவில் இருந்து ஆண்டுக்கு சுமார் 7,000 கோடி டாலர் (சுமார் 5,32,000 கோடி) மதிப்பிலான பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிறது. இதில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மட்டும் 27 சதவீதம். எனவே, சீனாவில் கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் மூடப்பட்டபோதே, இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆட்டம் காண துவங்கின. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டு வருகிறது.  இந்த துறை சுமார் 3.5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது. ஆனால், பணமதிப்பு நீக்கத்தின்போது மட்டும் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மட்டும் வாகன மற்றும் உதிரிபாக உற்பத்தி துறை சார்ந்த சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு வேலை போய்விட்டது என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அவல நிலை. விற்பனை சரிவால் கடந்த சில மாதங்களாக மட்டும் ஒரு லட்சம் பேர் வேலை பறிபோயுள்ளது என்கிறது, இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம். தற்போது கொரோனாவின் கோர தாண்டவம் முடிவுக்கு வந்தாலும், எதிர்காலத்தில் இந்த துறையின் நிலை என்னவாகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒரு வேளை இந்த துறை மீண்டு வந்தாலும், பிஎஸ் 6 வாகனங்கள் விலை அதிகமாகவே இருக்கும்.

 ஏற்கெனவே, ஊரடங்கில் வாகன உதிரிபாக தொழில்துறைகள் மூடலால் நாள் ஒன்றுக்கு 2,300 கோடி இழப்பு ஏற்படும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது. இதுதவிர, பிஎஸ் 4 தரநிலையில் உள்ள 7 லட்சம் டூவீலர்கள், 15,000 பயணிகள் கார்கள், 12,000 வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனையாகாமல் உள்ளனவாம். கொரோனாவால் அனைத்து துறைகளும் முடங்கியதால், வேலை இழப்பு மற்றும் வருவாய் இழப்பு அதிகரிக்கும். எனவே, மக்களிடையே வாங்கும் சக்தி மீண்டும் ஏற்படுமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது. நாட்டின் பொருளாதாரம் றைந்தது 2 சதவீத வளர்ச்சியாவது எட்டினால்தான் எதிர்காலம் நம்பிக்கையூட்டுவதாக அமையும் எனவும், அதற்கேற்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம் என தொழில்துறையினர் மற்றும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

7.5 லட்சம் பேர் வேலை பறிபோகும்
நாட்டின் ஜிடிபியில் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி துறையின் பங்களிப்பு 2.3 சதவீதம். இதில் 50 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் ஒப்பந்த ஊழியர்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சுமார் 15 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர். அடுத்த காலாண்டில் மேலும் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் பேரின் வேலை பறிபோகலாம் என்று உதிரிபாக உற்பத்தி துறையினர் தெரிவிக்கின்றனர்.

விற்பனையே இல்லாத மாதம்
கொரோனா ஊரடங்கால் உற்பத்தி மற்றும் டீலர் ஷோரூம்கள் மூடப்பட்டதால், கடந்த ஏப்ரலில் ஒரு வாகனம் கூட விற்கவில்லை. இது, இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உதிரி பாகங்கள் பற்றாக்குறை
வாகன உற்பத்தியை நிறுத்தி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. உதிரி பாக உற்பத்தியும் தொடங்கினால்தான் தடையற்ற வாகன உற்பத்தி உறுதிப்படுத்த முடியும் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆறுதல் தருமா ஆன்லைன் புக்கிங்?
கொரோனாவால் ஷோரூம் விற்பனை சாத்தியமாகாத நிலையிலும், பிஎஸ்6 வாகனங்கள் விற்பனை ஏற்றத்துக்கு இப்போதே மக்களை தயார்ப்படுத்தும் உத்தியாகவும் ஆன்லைன் வாகன புக்கிங்கை சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏற்கெனவே, பிஎஸ்4 தரநிலையில் உள்ள 7 லட்சம்
டூவீலர்கள், 15,000 வாகனங்கள் விற்பனையாகாமல் உள்ளன. அதோடு, தற்போது வேலையின்மை, பணத்தட்டுப்பாடு நிலவுவதால், நிறுவனங்களின் இந்த உத்தி எவ்வாறு வெற்றி பெறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அன்று பணம் புரண்டது இன்று தடம் புரண்டது
* ஆண்டு வர்த்தகம் 10,000 கோடி டாலர் (சுமார் 7,60,000 கோடி)
* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு 50 சதவீதம். தொழிற்துறை ஜிடிபியில் 26 சதவீதம், ஒட்டுமொத்த ஜிடிபியில் 7.1 சதவீதம். இது 1992-93ல் 2.7 சதவீதமாக இருந்தது.
* கடந்த 10 ஆண்டில் இத்துறையில் முதலீடு 40 கோடி டாலர் (₹3,04,000 கோடி)
* அரசு இத்துறைக்கு அளித்த தொடர் ஆதரவால், 2001 முதல் 2010 வரை ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 15.67 சதவீதமாக இருந்தது.
* தற்போது, தொடர்ந்து விற்பனை சரிவு, வேலை இழப்பு என மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

2016
* 2016ம் ஆண்டு நவம்பரில்  பணமதிப்பு நீக்கம் ஆட்டோமொபைல் துறைக்கு பேரிடியாக அமைந்தது.

2017
* 2017ல் ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு பிறகு வாகனங்கள் விலை உயர்ந்ததால், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

2018
* 2018 அக்டோபரில் கச்சா எண்ணெய் பேரல் 86 டாலரானதால், சென்னையி–்ல் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹87-ஐயும், டீசல் ₹80-யும் தாண்டியது. இது, வாகன விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
* பருவழை பொய்த்து விவசாய வருவாய் சரிந்தது, ஊரக பகுதிகளில் வாகன விற்பனைக்கு வேட்டு வைத்தது.
* வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சிக்கலால், கடன் வழங்க முடியவில்லை. இதுவும் வாகன விற்பனைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.

2019
* பிஎஸ் 6 வாகன தரத்துக்கு மாற வேண்டிய கட்டாயம், 2005க்கு முந்தைய வாகனங்களை ஸ்கிராப் செய்யும் திட்ட அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் போன்றவற்றால், வாகன விற்பனை பாதிக்கப்பட்டது.

2020
* மத்திய அரசு பட்ஜெட்டில், ஆட்டோமொபைல் துறை எதிர்பார்த்த அளவுக்கு அறிவிப்புகள் இல்லை. இது இத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
* பிஎஸ் 6 வாகனங்கள் சந்தையில் விற்பனைக்கு தயாரான நிலையில், கொரோனா பரவல் வாகன துறையின் கனவுகளுக்கு வேட்டு வைத்து, கொஞ்ச நம்பிக்கையையும் தகர்த்து விட்டது.

Tags : withdrawal ,GST , Money Laundering, Automotive Department, GST, Corona
× RELATED ஏப்ரல் - ஜூலை வரையிலான ஜிஎஸ்டி...