×

ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு மேலும் அதிர்ச்சி: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மதிப்புக் கூட்டு வரி அதிகரிப்பால் பெட்ரோல் 3.25, டீசல் 2.50 எகிறியது

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் இழப்ைப ஈடுகட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியில் மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 3.25, டீசல் லிட்டருக்கு 2.50 உயர்த்தியுள்ளது. இதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 3.25 உயர்ந்து 75.53ம், டீசல் 2.50 உயர்ந்து 68.21ஆகவும் விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று எதிர்பார்த்த அளவில் கட்டுக்குள் வராத நிலையில் தற்போது அந்த ஊரடங்கு மே 17ம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நெருக்கடிகாலத்தில் அரசின் வருவாயை சரிகட்ட அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிதிப்பற்றாக்குறை காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப் படி, ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணம் பெறுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது.  மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாயை முக்கிய வருவாய் ஆதாரமாக கொண்டிருக்கின்றன. கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு கிடைத்த கலால் வரியில், சுமார் 92 சதவீதம் பெட்ரோலிய பொருட்கள் மூலமாகத்தான் கிடைத்தது.

இதுபோல், மத்திய அரசின் மொத்த வருவாயில் பெட்ரோலிய பொருட்கள் மூலமாக கிடைப்பது 20 சதவீதம் என, பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வுப் பிரிவு கூறுகிறது.
 பெட்ரோல் விலையை குறைக்காவிட்டாலும், விற்பனை கடுமையாக சரிந்ததால் மேற்கண்ட வருவாய் குறைந்து அரசுக்கு குறைந்து விட்டது.  இந்த மாதம் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு சுமார் 70 சதவீதத்துக்கு மேல் சரிந்து விட்டது. இதனால், நிதி பற்றாக்குறையில் திண்டாடும் அரசுகள், செலவை ஈடுகட்ட, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வரவில்லை என்று கூறும் தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், அரசுக்கான வரிவருவாய் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதனால் வரி வருவாயை பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட் வரி) நேற்று உயர்த்தியது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 3.25, டீசல் லிட்டருக்கு 2.50 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.   கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், கடந்த 49 நாட்களாக பெட்ேரால், டீசல் விலை மாற்றமின்றி நீடிக்கிறது. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 72.28ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ₹65.71ஆகவும் இருந்தது. தற்போது வாட் வரியால் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 3.25 உயர்ந்து 75.53ம், டீசல் 2.50 உயர்ந்து 68.21ஆகவும் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 20 டாலருக்கும் கீழ் சரிந்து விட்டது. இதன்படி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு வரியை உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெட்ரோல் விலை உயர்வு குறித்து பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் தற்போது வாட் வரி பெட்ரோலுக்கு 34 சதவீதம், டீசலுக்கு 25 சதவீதம் எனஉள்ளது. பெட்ரோல் விலை என்பது ஒரு லிட்டருக்கு 15 சதவீதம் மற்றும் 13.02ம் டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 11 சதவீதம் மற்றும் 9.62 காசுகள் என்ற அடிப்படையில்  வாட் வரியை அரசு நிர்ணயம் செய்துள்ளது. இது தவிர எண்ணெய் நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய கலால்வரி,மற்றும் டீலர்களின் கமிஷனை சேர்த்து ,பெட்ரோல் லிட்டருக்கு 3.25 என்றும், டீசல் லிட்டருக்கு 2.50 என்றும் உயர்த்தி விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

* தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வாட் வரியில் மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 3.25, டீசலுக்கு 2.50 உயர்த்தியுள்ளது.
* பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்ததால் அரசுக்கு வரி வருவாய் குறைந்து விட்ட நிலையில் இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தியுள்ளது.



Tags : Tamil Nadu , Currency, Tamil Nadu, Petrol, Diesel, Prices
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...