×

கோவையில் ஹாட்ஸ்பாட் என்று அழைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் நோய் தொற்றில்லா பகுதியாக மாறியது: மக்கள் மகிழ்ச்சி

கோவை: கோவையில் ஹாட்ஸ்பாட் என்று அழைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் தற்போது நோய் தொற்றில்லா பகுதியாக மாறியுள்ளது. தடுப்பு நடவடிக்கை, மக்களின் ஒத்துழைப்பால் தொற்றில்லா பகுதியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஏப்ரல் முதல் வாரத்தில் மட்டும் 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மிக அதிகம் பேர் பாதிக்கப்பட்ட இடமாக மேட்டுப்பாளையயம் இருந்தது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை ஒருபுறம் அளிக்கப்பட்டபோதிலும், மற்றொருபுறம் நோய் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை, காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக களப்பணியில் இறங்கினர். பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி சீல் வைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகள் கொரோனா மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பெரும்பான்மையான சாலைகளும், தெருக்களும் மூடப்பட்டன.

கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்ட பகுதிக்குள் இவை வந்தன. மேட்டுப்பாளையத்தின் காய்கனி மார்க்கெட் முக்கியமான பகுதியாகும். ஊட்டியிலிருந்து வரும் காய்கனிகள் இங்கு விற்கப்படும். இங்கிருந்துதான் சென்னை கோயம்பேடுக்கே காய்கறிகள் செல்லும். இதுவும் இந்த அடைக்கப்பட்ட பகுதிக்குள் அடைபட்டது. எனவே, வெளியே வர முடியாத மக்களுக்கு உதவும் வகையில் ஏகப்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுவதை காவல்துறையினர் கண்காணித்தனர்.

கொரோனாவின் வீரியத்தை உணர்ந்து பொது மக்களும் போதிய ஒத்துழைப்பு வழங்கினர். பாதிக்கப்பட்ட 46 பேரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 21 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படாததால், நோய்த் தொற்று இல்லாத பகுதியாக மேட்டுப்பாளையம் மாறியுள்ளது. இது அந்நகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : terrace ,Kovai ,Mettupalayam ,Coimbatore , Coimbatore, Hotspot, Mettupalayam, people are happy
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது