×

ஊரடங்கு தேதி நீட்டிப்பு ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடத்த வாய்ப்பில்லை

ஊட்டி : ஊரடங்கு மே மாதம் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி போன்றவை நடத்த வாய்ப்பில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் கடைபிடிக்கப்படுகிறது. இச்சமயங்களில் குளு குளு காலநிலையை கொண்டாட நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு நடத்தப்படும் கோடை விழாவில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல அனைத்து கண்காட்சிகளையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால், கடந்த மார்ச் 2வது வாரம் முதல் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 26ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், மீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், இந்த ஆண்டு காய்கறி, ரோஜா கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சி ஆகியவை நடத்துவதில் சாத்தியமில்லை. எனினும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மாடங்களில் தொட்டிகளை அலங்கரித்து அடுக்கும் பணிகளும் தற்போது துவக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ரோஜா பூங்காவில் அனைத்து செடிகளிலும் கொத்து கொத்தாக ரோஜா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துள்ளன. ஆனால், ஊரடங்கு உத்தரவால், இந்த மலர்களை யாரும் பார்க்காமலேயே இம்முறை உதிரும் நிலை ஏற்பட்டுள்ளது.  ரோஜா பூங்கா துவக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், இம்முறை வெள்ளி  விழாவையொட்டி 3 நாட்கள் ரோஜா கண்காட்சி நடத்த  திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பால், ரோஜா மலர்களை யாரும்  காண முடியாமலேயே போய்விட்டது.

மழையால் உதிரும் ரோஜாக்கள்
தாவரவியல் பூங்காவிலும் பல லட்சம் செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனையும் யாரும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்து வருவதால் ரோஜா பூங்காவில் உள்ள மலர்கள் மழைக்கு இதழ்கள் அழுகி உதிர துவங்கி உள்ளன. மலர்கள் மழையில் உதிர்ந்தாலும், தாவரவியல் பூங்காவில் உள்ள செடிகளில் மலர்கள் ஜூன் மாதம் வரை இருக்கும். ஒரு சமயம் மே மாதம் 17ம் தேதிக்கு பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், உள்ளூர் மக்கள் இந்த மலர் அலங்காரங்களையும், மலர்களையும் கண்டு ரசித்து செல்ல முடியும்.

Tags : exhibition , no opportunity , rose exhibition , curfew extension feeder
× RELATED 2வது நாள் மருத்துவ கவுன்சிலை தவற விட்ட...