×

வேலூர் தொரப்பாடி தற்காலிக மார்க்கெட்டில் கைகளை சுத்தம் செய்து காய்கறிகள் வாங்கிச் சென்ற மக்கள்

வேலூர்: வேலூர் தொரப்பாடியில் உள்ள தற்காலிக மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் சோப்பு, தண்ணீரைக் கொண்டு கைகளை சுத்தம் செய்துகொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் மருத்துவம், வருவாய்த்துறை, சுகாதாரம், போலீசார், உள்ளாட்சி அமைப்புகள், தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவையொட்டி பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மளிகை கடை, மருந்தகம், பால் விற்பனை நிலையங்கள், இறைச்சி கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொருட்களை வாங்க வெளியே வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும், என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி, வேலூர் மக்களுக்கு காய்கறிகள் தடையின்றி கிடைக்கும் வகையில் வேலூர் புதிய பஸ் நிலையம், சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் பள்ளி, தொரப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாகாயம் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மைதானம், காட்பாடி காந்திநகர் டான்பாஸ்கோ பள்ளி ஆகிய 5 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், வேலூர் தொரப்பாடியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டிற்கு நேற்று வந்த பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கை கழுவும் இடத்திற்கு சென்றனர். அங்கு குழாய் அருகே வைக்கப்பட்டிருந்த சோப்பைக் கொண்டு கைகளை சுத்தம் செய்தனர். பின்னர், தண்ணீரால் கைகளை கழுவிக்கொண்டு காய்கறி கடைகள் முன்பாக சமூக இடைவெளியை கடைபிடித்தபடி வரிசையில் நின்றனர். ஒவ்வொருவராக சென்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

Tags : Vellore Thorapadi , People, hands , vegetables , Vellore Thorapadi temporary market
× RELATED வேலூர் தொரப்பாடியில் நிரம்பி வழியும்...