×

ஊரடங்கால் கேரள வியாபாரிகள் வரவில்லை தேவாரத்தில் தேயும் சிப்ஸ் தொழில்: ஆர்டர் இல்லாததால் தயாரிப்பாளர்கள் கவலை

தேவாரம்: கொரோனா ஊரடங்கால் கேரளா வியாபாரிகள் கொள்முதலுக்கு வராததால், தேவாரத்தில் சிப்ஸ் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்டரும் இல்லை; போதிய விலையும் கிடைக்காததால், தயாரிப்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கப்பை கிழங்கு (மரவள்ளிகிழங்கு) அதிகம் விளையும் பகுதியாக தேவாரம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் கப்பை கிழங்கு சாகுபடி செய்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அண்டை மாநிலமான கேரளாவில் கப்பைக் கிழங்கு அதிகமாக விளைவிக்கப்பட்டு வந்தது. பின்னர் தட்பவெப்பநிலை காரணமாக, கேரளாவைக் காட்டிலும் தேவாரம் பகுதியில் கப்பைக் கிழங்கு அதிகமாக விளைவிக்கப்பட்டு வருகிறது. தேவாரம் பகுதியில் இருந்து கேரளாவில் உள்ள இடுக்கி, திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கப்பைக் கிழங்கு அனுப்பி வருகின்றனர். கேரளாவில் கப்பைக் கிழங்கு பிரதான உணவாக உள்ளது.

இது தவிர கேரளாவில் கப்பை சிப்ஸ்களுக்கும் அதிக வரவேற்பு உண்டு. இதையும் தேவாரம் பகுதி மக்கள் தயாரித்து கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர். ஆண்டு முழுவதும் சிப்ஸ் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 300க்கும் மேற்பட்டோர் சிப்ஸ் தயாரித்து வருகின்றனர். இதுதவிர கம்பம், கூடலூர், தேனிக்கும் சிப்ஸ் தயாரித்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கொரோ னா ஊரடங்கால் கேரள மாநில வியாபாரிகள் சிப்ஸ் கொள்முதலுக்கு வரவில்லை. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிப்ஸ் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக ஒரு கிலோ சிப்ஸ் ரூ.55 முதல் 60 வறை விற்கப்படும். தற்போது ஒரு கிலோ சிப்ஸ் ரூ.50க்கும் குறைவாக விலை போவதாக சிப்ஸ் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் போதிய ஆர்டரும் இல்லை; வேலையும் இல்லை. இதனால், சிப்ஸ் தயாரிப்பாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இது குறித்து ஆசைத்தம்பி என்பவர் கூறுகையில், ‘தேவாரம் பகுதி கப்பை சிப்ஸ்க்கு கேரளாவில் மிகுந்த வரவேற்பு உண்டு. சேலம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக தேவாரத்தில்தான் சிப்ஸ் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கால் இந்த தொழில் முடங்கி உள்ளது. கேரளா வியாபாரிகளும் வருவதில்லை. இங்கிருந்து எல்லைப் பகுதிக்கு சென்று தரவேண்டி உள்ளது. இதனால் உற்பத்தி அதிகளவில் இல்லை. தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை’ என்றார்.

Tags : Curry ,Kerala Merchants ,Producers ,Kerala Merchants Chips , Curry , coming , Kerala Merchants Chips, industry
× RELATED வேர்க்கடலை போண்டா