×

ஊரடங்கால் மரங்களில் வீணாகும் மாம்பழம், மா விவசாயிகளுக்கு ‘மா’பெரும் இழப்பு

நத்தம்: நத்தம் பகுதிகளில் தேத்தாம்பட்டி, பரளி, புன்னப்பட்டி, சேர்வீடு, சமுத்திராபட்டி, பூதகுடி, சிறுகுடி, குட்டுப்பட்டி, செந்துறை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மாந்தோப்புகள் உள்ளன. இந்த தோப்புகளில் கடந்த டிசம்பரில் பூக்கள் பூப்பதற்கும், பிஞ்சு வைப்பதற்கும் மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டனர். ஏப்ரல் மாதம் மா மரங்களில் அறுவடை செய்யும் தருணத்தில் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மரங்களிலிருந்து மாங்காய்களை பறிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கால் வெளி மாநில வியாபாரிகள் கொள்முதலுக்கு வரவில்லை. வாகன போக்குவரத்து இல்லாததால் அறுவடை செய்த மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மதுரை, திண்டுக்கல் ஆகிய நகர்ப்பகுதியில் உள்ள கடைகளுக்கு கொண்டு சென்றாலும், தேவை குறைவான நிலையில் போதிய விலை கிடைக்கவில்லை. மேலும், போதிய மழை பெய்யாததால் மா மரங்களில் உள்ள மாம்பழங்கள் நீர்ச்சத்தின்றி எடை குறைவாக உள்ளது.

எனவே, அவற்றை அறுவடை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து மா விவசாயி சித்திக் கூறியதாவது: இந்த ஆண்டு மா சாகுபடிக்கு போதிய மழை பெய்யவில்லை. மாம்பழ சீசன் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், மாம்பழங்களை விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் போனது. மாம்பழங்கள் சிறிதாக இருப்பதால் செந்தூரம் கிலோ ரூ.15 முதல் 20 வரை விலை போகிறது. இதனால், மாம்பழங்களை பறிக்காமல் மரங்களில் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் மா விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

Tags : mango farmers ,loss , great loss,mango, mango farmers
× RELATED முடி உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள்!