×

சேடபட்டி அருகே நலவாரிய அட்டை இருந்தும் நிவாரணம் இல்லை

* புதுப்பிக்காததை காரணம் காட்டி புறக்கணிப்பு கைத்தறி நெசவு தொழிலாளர்கள் புகார்

பேரையூர்:  சேடபட்டி அருகே நலவாரிய அட்டை இருந்தும் புதுப்பிக்காததை காரணம் காட்டி நிவாரணம் வழங்க மறுப்பதாக கைத்தறி நெசவு தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றியம், திருமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்டது டி.ராமநாதபுரம். இங்கு சுமார் 70 குடும்பத்தினர் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இவர்கள் தினம் சம்பாதிக்கும் வருமானத்திலே பிழைப்பை ஓட்டி வந்தனர். தற்ஙபாது கொரோனா ஊரடங்கால் அனைவரும் எந்த வேலையுமின்றி உற்பத்தி செய்த பொருளை விற்கவும் முடியாமல், உற்பத்தி செய்ய பொருட்கள் வாங்க பணமும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். நலவாரிய அட்டை வைத்துள்ள இவர்களுக்கும் அரசு ரூ.1000 நிவாரணத்தொகை 2 தவணையாக அறித்தது. ஆனால் இவர்கள் நலவாரிய அட்டையை புதுப்பிக்க தவறி விட்டதால், அதை ஒரு காரணமாக காட்டி இதுவரை ஒரு தவணை கூட நிவாரண தொகை வழங்கப்படவில்லை. இதனால் 70 குடும்பத்தினரும் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து டி.ராமநாதபுரத்தை சேர்ந்த வனிதாமணி கூறுகையில், ஏற்கனவே விசைத்தறி வந்ததால் கைத்தறி தொழில் முற்றிலும் பின்தங்கி விட்டது. தற்போது கொரோனா ஊரடங்கால் இப்போது அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கே சிரமப்பட்டு வருகிறோம். நிவாரணம் ரூ1000 வழங்குவது என்பது ஏதோ ஒரு சிரமத்தை சமாளிக்குமே தவிர நிரந்தர தீர்வை தராது. இதில் நலவாரிய அட்டை புதுப்பிக்கப்படவில்லையென ஒரு காரணத்தை காட்டி அரசு எங்களை முற்றிலும் ஒழிக்க பார்க்கிறது’ என்றார். புனிதா கூறுகையில், ‘குழந்தைகளுக்கு ஏதேனும் உணவுப்பண்டம் வாங்கி கொடுக்க கூட எந்த வருமானமும் இல்லை. புதுப்பிக்கப்படாத நலவாரிய அட்டைகளுக்கு நிவாரணம் கிடையாது என்ற நிபந்தனையை நீக்கி, எங்களை போன்ற உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

ராஜேந்திரன் கூறுகையில், ‘100 நாள் வேலைத்திட்டம் இருந்தால் கூட அந்த வேலை செய்து கூட அன்றாட பிழைப்புக்கு சமாளித்து விடுவார்கள். ஆனால் 144 தடை உத்தரவால் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் வருமானமின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்’ என்றார். வீரமணி கூறுகையில், ‘புதுப்பிக்காத நலவாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கும் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்து இப்பகுதியில் வாழும் 70 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

இந்த தொழில் தவிர வேறு ஏதும் தெரியாது
திருமாணிக்கம் ஊராட்சிமன்ற தலைவர் கணேசன் கூறுகையில், ‘டி.ராமநாதபுரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாற்றுத்தொழில் தெரியாது. இந்த ஒரு தொழில் மட்டுமே குல தொழிலாக செய்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் கொடுத்து உதவ வேண்டும். இதுகுறித்து எங்கள் ஊர் விஏஓவிடம் தெரிவித்துள்ளேன்’ என்றார்.

Tags : Sedapatti , no relief, welfare card , Sedapatti
× RELATED காரில் ஆண் சடலம் திருமங்கலத்தில் பரபரப்பு