×

கொரோனா ஊரடங்கால் வருவாயின்றி தவிக்கும் கல்வெட்டு தொழிலாளர்கள்

* மாதம் கடந்து மூடிக்கிடக்கும் பட்டறைகள்
* கடவுள் சிலை வடிப்பவர்கள் கண்ணீர்

திருப்பரங்குன்றம்: கொரோனா ஊரடங்கால் மதுரையில் மாதம் கடந்து கல்வெட்டு பட்டறைகள் மூடிக்கிடப்பதால் ஏராளமான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். கடவுள் சிலை வடிக்கும் தங்களை கடவுளும், அரசும்தான் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், பசுமலை, முத்துப்பட்டி, அவனியாபுரம், வில்லாபுரம், தென்பரங்குன்றம் ஆகிய இடங்களில் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டு பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்கு கிரானைட் கல்வெட்டு, சாமி சிலைகள் செய்வது முக்கிய தொழிலாகும். இத்தொழிலில் இப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கல்வெட்டு பட்டறைகளில் ஆண்டுதோறும் வேலை இருந்தாலும்,  ஜனவரி துவங்கி ஆகஸ்ட் வரையிலான காலங்களில்தான் அதிகளவில் வேலை இருக்கும்.

குறிப்பாக கும்பாபிஷேகங்கள் இந்த குறிப்பிட்ட காலத்தில்தான் அதிகளவில் நடத்தப்படும். இதற்கென சாமி சிலைகள் செய்வதற்கான ஆர்டர்கள் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே வருவதால் இந்த குறிப்பிட்ட மாதங்களில் அதிக வேலைவாய்ப்பு இருப்பதோடு நல்ல வருவாயும் கிடைக்கும். தற்போது  கொரானா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு அமலில் இருப்பதால் இப்பகுதிகளில் உள்ள 100க்கும் அதிக கல்வெட்டு பட்டறைகள் இயங்காமல் மூடிக்கிடக்கின்றன. இதனால் இந்த பட்டறைகளில் வேலை செய்யும் 500க்கும் மேற்பட்டோர் வேலை இழந்து வருமானமின்றி தவியாய் தவித்து வருகின்றனர்.  

இதுகுறித்து கல்வெட்டு பட்டறை நடத்தி வரும் அய்யாகுட்டி முருகன் கூறுகையில், ‘ஊரடங்கு அமலில் உள்ளதால்  ஒரு மாதத்திற்கும் மேலாக கல்வெட்டு பட்டறையை மூடி வைத்திருக்கிறோம். சீசன் காலத்தில் திறக்க முடியாமல் போனதால், ஒவ்வொரு பட்டறைக்கும் ரூ.5 லட்சம் வரையிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு முழுவதுமே தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் அவரவரின் தகுதி அடிப்படையில் நாளொன்றுக்கு ரூ.450 முதல் ரூ.700 வரை சம்பளம் வழஙகி வந்தோம். தற்போது தொழிலாளர்கள் குடும்பத்துடன் கடும் சிரமப்படுவதால் வேலை இல்லாத நிலையிலும், கடன் வாங்கி அவர்களுக்கு ஒரு தொகை கொடுத்திருக்கிறோம்.  இனிமேலும் தொடர்ந்து கொடுக்க எங்களிடமும் எந்த பணமும் இல்லை.

கல்வெட்டு பட்டறைகளை வாரத்தில் 3 நாட்களாவது திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். கல்வெட்டு பட்டறை தொழிலாளி ரமேஷ் கூறுகையில், ‘கடந்த மாதம் முழுவதும் வேலை இல்லை. அன்றாடம் வேலை பார்த்தால்தான் எங்களுக்கு கூலி. தினசரி உணவிற்கே மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. கடவுள் சிலைகளை செய்த எங்களை அந்த கடவுளும், இந்த அரசும்தான் காப்பாற்ற வேண்டும். தினமும் வேலை செய்தால் தான் வருமானம் என்ற நிலையில், வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறோம்’ என்றார்.

Tags : Inscription workers ,Corona , Inscription worker,s stranded, Corona currencies
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...