×

கொரோனா ஊரடங்கு உத்தரவால் சிற்பி, சங்குமணி விற்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி: நிவாரணம் வழங்க கோரிக்கை

சென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவால், மாமல்லபுரத்தில் சிற்பிகள், சங்குமணி விற்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால், நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பிகள் மற்றும் சங்குமணி விற்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் பல்லவ கால சிற்பங்களை பார்ப்பதற்காக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வர். சில ஆண்டுகளாக வெளிநாட்டு பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்தது.
ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலம் என்பதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் வருவது வழக்கம். அப்படி வருபவர்கள் கற்சிற்பம் மற்றும் சங்குமணி ஆகியவற்றை கண்டுரசித்து ஆர்வமுடன் வாங்கி செல்வர்.

முக்கியமாக, சிற்பிகள் மற்றும் சங்கு மணி விற்பவர்கள் சுற்றுலா பயணிகளை நம்பிதான் உள்ளனர். மேலும், பல்லவ சிற்பங்கள் அனைத்தையும் தொல்லியல் துறையினர் பூட்டுப்போட்டு மூடியுள்ளனர்.  இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது. சிற்பம் செதுக்கும் தொழிலில்  தினக் கூலிகள் 3,000 பேரும், சொந்தமாக சிற்ப கூடம் வைத்திருக்கும் 1,500 பேர் மற்றும் சங்குமணி விற்பவர்கள் 500 பேர் என மொத்தம் 5,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் யாரும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வீட்டை விட்டு வெளியே வராமல்  முடங்கி உள்ளனர். இதனால், சிற்பிகள் மற்றும் சங்குமணி விற்பவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சினிமாத்துறைபோல் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளால் பாரம்பரிய கலை சார்ந்த ஒரு தொழிலாக இது பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருமாத காலமாக இந்த தொழில்கள் அனைத்தும் தடைபட்டுள்ளது. எங்களுக்கு தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழக அடையாள அட்டை இருந்தும் எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை. அரசு ஒரு குடும்ப அட்டைக்கு  1,000 கொடுத்தும் அது எங்களுக்கு போதவில்லை. தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அரிசி கொடுத்தாலும், மற்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும், தமிழக அரசு எத்தனையோ நாட்டுப்புற கலை சார்ந்த தொழிலுக்கு உதவிகளை செய்கிறது. அதுபோல, சிற்பிகள் மற்றும் சங்குமணி விற்பவர்களுக்கு நிவாரணம் வழங்கி வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Corona ,sculptor ,sellers ,carpenter sellers ,Carona Curfew ,Architect , Corona, curfew, sculptor, sellers, relief
× RELATED ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற இருவர் கைது