×

மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் சுகாதாரமற்ற உணவால் உடல் நலம் பாதிப்பு: தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு

துரைப்பாக்கம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்த மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் குறிப்பாக வடசென்னையில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.  சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் காலை உணவாக இட்லி, பொங்கல், கிச்சடி என ஏதாவது ஒன்று அளிக்கப்படுகிறது. மதியத்திற்கு புளிசாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம் என ஏதாவது ஒன்று வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தினசரி காலையில் வழங்கப்படும் உணவு சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், அதனை சாப்பிட்டால் உடல் உபாதை ஏற்படுவதாகவும் தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி தூய்மை பணியாளர்களுக்கு தினமும் ஒரு முகக்கவசமும், வாரத்திற்கு இரண்டு கையுறையும் வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் 2 கையுறை 7 நாட்களுக்கு போட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுவும் தரமற்ற முறையில் உள்ளதாகவும், இதனால் பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றுவதாகவும் தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க துணை பொதுச் செயலாளர் தேவராஜ் கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 196வது வார்டுக்குட்பட்ட ஒரு தூய்மை பணியாளருக்கு காலையில் கொடுத்த உணவை சாப்பிட்டு உடல்  உபாதை ஏற்பட்டது.

இவர்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட கட்டாயமாக பணிக்கு வரவேண்டும் எனவும், தவறினால் வேலையை விட்டு நிரந்தரமாக  நிறுத்தி விடுவதாகவும் அதிகாரிகள் மிரட்டுகிறனர். அதுமட்டுமல்லாமல் தூய்மை பணியாளர்கள் பணிக்கு வந்து செல்ல மாநகராட்சி பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த பேருந்தில் செல்லும் தூய்மை பணியாளர்கள் சமூக இடைவெளி இல்லாமல் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். எல்லா பகுதிகளுக்கும் பேருந்து வசதி செய்து தராததால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தூய்மை பணியாளர்களை இறக்கி விட்டு செல்கின்றனர்.

அங்கிருந்து அவர்கள் அவ்வழியே வரும் மாநகராட்சி குப்பை லாரியில் ஏறி செல்லும் சூழ்நிலை உள்ளது. மேலும் போதுமான பஸ் வசதி இல்லாததால் 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை மாநகராட்சி குப்பை லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.


Tags : personnel ,corporation , Corporation, unhealthy food, body, cleanliness staff
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!