×

எதை, எதை பார்க்கிறதுன்னு இல்லையா... ரொம்ப படுத்துறாங்கப்பா.... ஊரடங்கில் பொழுதுபோகாத மக்கள் பாத்திரம் கழுவுறதை பார்த்து சாதனை: 2 கோடி பேர் பார்த்துள்ளனர்

நியூயார்க்: ஊரடங்கினால் பொழுது போகாமல் இருக்கும் மக்கள், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் எது ஹிட்டானாலும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் ஒரு பெண், தோசைக்கல் போன்று மாறிப்போன பீசா வலை தட்டை கழுவுவதை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் அய்லா ஜலின். இவர் யூடியூப் மற்றும் டிக்டாக்கில் பிரபலமானவர். இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டில் பொழுதுபோகாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த இவரது கணவர், ‘பை’ எனப்படும் பீசா போன்ற ஒரு உணவை தயாரித்துக் கொடுக்கும்படி இதமாக கூறியுள்ளார். அய்லாவும் பதமாக அதை செய்துக் கொடுப்பதற்காக சமையலறைக்கு சென்றுள்ளார். ஆனால், ‘பை’யை தயாரிக்கும் தோசைக்கல் போன்ற வலை அமைப்புடன் இருக்கும் கல் முழுவதும், ஓட்டைகள் தெரியாத அளவுக்கு கருப்பு உணவுத்துகள்கள் முழுமையாக ஒட்டிக் கொண்டிருந்தன.

அதில் ‘பை’யை செய்தால் ருசியாக இருக்காது என்பதால், அதுபற்றி கணவரிடம் கூறியுள்ளார். அவர் கடுப்பாகி போய் ‘பப்பா ஜான்ஸ்’ நிறுவனத்தில் அதை ஆர்டர் கொடுத்துவிட்டு, ‘‘நீ எதற்கும் லாயக்கில்லை’’ என்று திட்டிவிட்டு மீண்டும் டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டார். இதனால் கண்ணை கசக்கிக் கொண்டு சமையலறைக்கு சென்ற அய்லா. இன்றைக்கு வலைத்தட்டா, நானா என்று பார்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினார். இதை தன்னுடைய ரசிகர்களுக்கும் காட்ட வேண்டும் என்று நினைத்து அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். வலைத்தட்டை எடுத்து தண்ணியில் ஊறப்போட்டு, கழுவிப்பார்த்தார். ஆனால், கருப்பு உணவுத்துகள்கள் சற்றும் அகலாமல் ‘ஙே’ என்று இருந்தது. இதனால் மீண்டும் தண்ணீரில் ஊறப்போட்டு அதை பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பரால் தேய்த்து பார்த்தார். ஊ...ஹூ...ம் அப்படியும் போகவில்லை.

கத்தியை போன்ற ஒன்றை எடுத்து சுரண்ட ஆரம்பித்தார். தாய் அய்லா படும் ‘வேதனை’யை குழந்தையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தது. சோப்பு நுரை, ஓவன் கிளீனர் என்ற பல விதங்களில் முயன்று கடைசியாக, வலை தட்டில் ஓட்டைகளை பார்க்கும் அளவுக்கு செய்துள்ளார் அய்லா. இதை அப்படியே டிக்டாக்கில் பதிவேற்றிவிட்டார். இப்படி அய்லா பாத்திரம் தேய்த்த ‘வரலாற்றை’ இதுவரை 2 கோடியே 20 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளதுதான் சாதனை மக்களே.... யாருக்கு தெரியும்.... நம்ம ஊரு அப்பத்தா, அப்பம் சுட்டால் அதை 40 லட்சம் பேர் கூட பார்க்க வாய்ப்புள்ளது. இதனால், எவராயினும் முயன்று பார்க்கலாம். எல்லாம் ஊரடங்கு படுத்தும்பாடு...

Tags : character , Curfew, YouTube, Social Networks, Corona
× RELATED இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி...