×

கொரோனா கூட நின்னு கொல்லும் பசி தினம், தினம் கொல்லுதே....சிமெண்ட் கலவை இயந்திரத்தில் மறைந்து சென்ற தொழிலாளர்கள்

இந்தூர்: கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உயிரை பணயம் வைத்து சிமெண்ட் கலவை இயந்திரத்தில் உத்தரப் பிரதேசம் செல்ல முயன்ற 18 தொழிலாளர்களை போலீசார் பிடித்து தனிமைப்படுத்தி உள்ளனர். சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகின்றது. இதனால் ஊரடங்கு அமல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு வருகிற 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தரை வழி, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு தொடங்கியபோது அடித்து பிடித்து கிடைத்த வாகனங்களில் பயணித்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். ஆனால் ஏராளமானோர் வெளியூர்களிலும்,வெளிமாநிலங்களிலும் சிக்கி தவித்து வருகின்றனர். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர், வேலையில்லாததாலும், வருமானம் இன்றியும், உண்ண உணவின்றி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் எப்படியாவது சொந்த ஊர் சென்று குடும்பத்தோடு இணைந்துவிட வேண்டும் என்ற கட்டாயத்துக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஏறி மறைந்திருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிமெண்ட் கலவை இயந்திரம் ஒன்று நேற்று சென்றது. தலைநகர் இந்தூரில் வழக்கமான சோதனைக்காக போலீசார் நிறுத்தினர். வழக்கமாக சிமின்ட் கலவை இயந்திரம், லாரி வேகமாக செல்லும்போது சுற்றியபடிதான் இருக்கும். ஆனால், இந்த லாரியில் கலவை இயந்திரம் பேரல் சுற்றாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதில் ஏறி பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம், அதன் உள்ளே உயிரை பணயம் வைத்து சுமார் 18 தொழிலாளர்கள் கோழிகளை போன்று அடைந்து உட்கார்ந்திருந்தனர்.

பிடிபட்ட 18 தொழிலாளர்களும் மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவிற்கு செல்ல முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வாகன ஓட்டுனர் மற்றும் மறைந்திருந்த 18 தொழிலாளர்களையும் போலீசார் தனிமைப்படுத்தி உள்ளனர். மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.



Tags : Corona ,hunger strike , Corona, hunger, workers, curfew
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...