×

தொடர்ந்து பச்சை மண்டலமாக நீடிப்பு: கிருஷ்ணகிரி விவசாயிக்கு கொரோனா சேலம் கணக்கில் சேர்க்கப்பட்டது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 67 வயது விவசாயி உழவார பணிக்காக ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளார். அவருடன் கிருஷ்ணகிரி பழையபேட்டை நல்லத்தம்பி தெரு, பங்காளித்தெரு, பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேரும் கடந்த மார்ச் 23ம் தேதி சென்றுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஒரு மாதமாக அங்கேயே தவித்து வந்தனர். இந்நிலையில், கலெக்டரிடம் அனுமதி பெற்று, காவேரிப்பட்டணத்திலிருந்து டிரைவர் மூலம் கார் எடுத்துச் செல்லப்பட்டு, அவர்கள் கடந்த 29ம் தேதி ஊர் திரும்பினர்.

இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் நல்லூர் சென்று, விவசாயி சளி மற்றும் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால், அவரை இரவோடு இரவாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, விசாரித்ததில், அவருடன் வந்த கார் டிரைவர் உட்பட மற்ற 4 பேரின் விவரமும் தெரியவந்தது.தொடர்ந்து, கிருஷ்ணகிரி விரைந்து வந்த மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட 3 பேருடைய வீட்டிற்கும், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த கார் டிரைவர் வீட்டிற்கும் சென்று அவர்களது சளி மற்றும் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர்களையும் மற்றும் குடும்பத்தினரையும் 24 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளனர். அத்துடன் அவர்கள் வசித்து வரும் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை அதே பகுதியில் உள்ள அரசு கட்டிடத்தில் தற்போது தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
நல்லூர் விவசாயி பாதிக்கப்பட்டதால்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று காலை மாவட்ட கலெக்டரால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்திற்கு கிருஷ்ணகிரி மாறியதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

ஆனால் கிருஷ்ணகிரியை ெதாடர்ந்து பச்சை மண்டலத்தில் வைக்க அதிகாரிகள் குளறுபடி செய்து கிருஷ்ணகிரி விவசாயியை சேலம் கணக்கில் அறிவித்துவிட்டனர். இவர், நேரடியாக சேலம் வந்ததாகவும், அங்கு எல்லையில் மடக்கி பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்றை சேலம் மாவட்ட சுகாதாரத்துறையினர் உறுதிபடுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் நேற்றிரவு கேட்டபோது, இன்னும் கிருஷ்ணகிரி பச்சை மண்டலத்தில்தான் உள்ளது என்றார்.

லாரி டிரைவருக்கு கொரோனா உறுதி 2 தீப்பெட்டி ஆலைகள் மூடல்
கோவில்பட்டியில் இருந்து தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிக் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்ற லாரி டிரைவர் ஒருவருக்கு கொேரானா தொற்று இருப்பது ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த லாரி டிரைவர் கோவில்பட்டியில் தங்கியிருந்த லாரி புக்கிங் அலுவலகம், தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றப்பட்ட 2 தீப்பெட்டி தொழிற்சாலைகள் உடனடியாக மூடப்பட்டது.


Tags : Corona Salem ,Green Zone ,Krishnagiri , Green Zone, Krishnagiri, Farmer, Corona, Salem
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்