×

மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் சென்ற 351 பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் நாண்டெட் மாவட்டத்தில் ‘தக்த் ஹசூர் ஷாஹிப்’ என்ற பிரசித்திப் பெற்ற குருத்வாரா உள்ளது. இந்த குருத்வாராவுக்கு பஞ்சாப்பில் இருந்து நூற்றுக்கணக்கான சீக்கிய பக்தர்கள் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இவ்வாறு இந்த குருத்வாராவுக்கு கடந்த மார்ச் மாதம் வந்த நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக பஞ்சாப்புக்கு திரும்பி செல்ல முடியாமல் குருத்வாராவிலேயே சிக்கிக் கொண்டனர். இதற்கிடையே, சமீபத்தில் பஞ்சாப் அரசு இவர்களை திருப்பி அழைத்து ஏற்பாடு செய்தது. அம்மாநில அரசு ஏற்பாட்டின் பேரில் சிறப்பு பஸ்கள் நாண்டெட்டில் இருந்து பஞ்சாப்புக்கு இயக்கப்பட்டன. சுமார் ஆயிரம் பக்தர்கள் பஞ்சாப்புக்கு திருப்பி அழைத்துச் செல்லப்பட்டனர்.

பஞ்சாப் சென்றதும் அவர்கள் அனைவரின் தொண்டைச்சளி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 351 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரேநாளில் 741 ஆக அதிகரித்தது. இந்த பிரச்னையில் மகாராஷ்டிரா அரசை பஞ்சாப் மாநில அரசு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

கிட்டத்தட்ட 40 நாட்கள் நாண்டெட் குருத்வாராவில் சிக்கியிருந்த பக்தர்களுக்கு மகாராஷ்டிரா அரசு பரிசோதனை நடத்தாமலேயே அவர்களை பஞ்சாப்புக்கு அனுப்பி வைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து, தனது அதிருப்தியை தெரிவித்து மகாராஷ்டிரா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே, நாண்டெட்டில் குருத்வாரா அமைந்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் குருத்வாரா நிர்வாகிகள், பணியாளர்கள் என 90 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 20 பேருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது

Tags : pilgrims ,Punjab Coronation ,Maharashtra , Maharashtra, Punjab, 351 Devotees, Corona
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி