×

தலைவர்கள் வலியுறுத்தல் மதுக்கடைகளை திறக்க கூடாது

சென்னை: மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது. ஏழை மக்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கான வாழ்வாதார உதவியாக 2000 ரொக்கமும், உணவு தானியங்களும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ்: மதுக்கடைகள் 40 நாட்களாக  மூடப்பட்டதால் மது இல்லாத தமிழகத்திற்கு ஆதரவாக மக்களின் மனநிலை மாறியிருக்கிறது. அதை மதித்து தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். மாறாக, மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அது அங்கு மட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சிதைத்து விடும்.

கடந்த ஒன்றரை மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசு குறைந்தபட்ச வாழ்வாதார உதவிகளை வழங்காவிட்டால், அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே,  ஏழை மக்களுக்கு அடுத்த இரு வாரங்களுக்கான வாழ்வாதார உதவியாக 2000 ரொக்கம், வழக்கமாக வழங்கப்படுவது போன்ற உணவு தானியங்களும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மதுக்கடைகளை மூடியதால் மதுப்பழக்கத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மதுக்குடிப்பதை நிறுத்திவிட்டார்கள். எனவே தமிழக அரசு ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி ஊரடங்கு முடியும் போது தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தினால் ஒட்டு மொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள், தமிழக அரசுக்கு நன்றியோடு இருப்பார்கள்.

மேலும் தமிழக அரசு மதுக்கடைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க இப்போதிருந்தே நடவடிக்கைகளை எடுத்து தமிழக மக்கள் நலன் காக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: மதுக்கடைகளை திறக்க மாநில அமைச்சரவை முடிவு எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன. இது இதுவரை எடுத்து வந்து நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தி, கொரோனா பரவலுக்கு பச்சைக்கொடி காட்டும் குற்றச் செயலாகிவிடும். மேலும், 40 நாள் நாடு முடக்கத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் நிலை குலைந்து போயிருப்பதை அரசு கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினர் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் குறைந்தபட்ச நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும்.

Tags : leaders ,emphasis pub , Bars, Corona, curfew
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...