×

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி உயிர் பயத்தில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு தப்பும் மக்கள்

* செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் மடக்கி பிடிக்கும் போலீசார்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள், தொழிலாளர்கள் தங்கள் வீடுகள் உள்ள தென்வெளிமாவட்டங்களுக்கு வாகனங்களில் அதிகளவில் பயணித்து வருகின்றனர். இதனால்செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு முதல் பைக், கார், வேன்கள் அதிகளவில் செல்வதை காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டும் நேற்று முன்தினம்  நிலவரப்படி 1082 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட புறநகர் பகுதிகளிலும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தொழில் நிமித்தமாக, படிப்பு, அரசு வேலையில் உள்ளவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தென்மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் வீடு, மேன்ஷன்களை எடுத்து தங்கி உள்ளனர். அரசின் ஊரடங்கு உத்தரவால் பசி, பட்டினி, நோயையும் பொருட்படுத்தாமல் பல்வேறு இன்னல்களுடன் சென்னையில் வாழ்கின்றனர்.

வேலைகள் இல்லாததால் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள், கொரோனா நோயினாலும் பாதிக்கப்படுவோம் என்று பீதியடைந்துள்ளனர். இதனால் பயத்தில் சொந்த ஊர்செல்ல முடிவு எடுத்து தப்பிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.குறிப்பாக, சென்னையில், உயிர் பயத்துடன் தங்கிய தென்மாவட்ட மக்கள் நேற்று காலை முதல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக திண்டிவனம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர் உள்பட பல இடங்களுக்கு பைக், கார், சரக்கு வாகனங்களில் கூட்டம் கூட்டமாகவும் குடும்பம் குடும்பமாகவும் சென்றனர். அவர்களை வண்டலூர், பரனூர், ஆத்தூர் ஆகிய  சுங்கச்சாவடிகளில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் அனுமதி கடிதம் பெற்றவர்கள் மட்டுமே அனுமதித்ததால், பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், நுற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றது.
பரனூர் சுங்கசாவடியில் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். வண்டலூர், பரனூர், ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடி  பகுதியை நேற்று வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு பரனூர் வழியாக செல்லாமல் சிலர் கிராம வழியாக மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும் சென்றனர். இதனால் ஓ.எம்.ஆர். மற்றும் இ.சி.ஆர். சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து  போலீசார் நேற்று காலை முதலே கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சென்னையில் இருந்து கடலூர், புதுச்சேரி, தஞ்சாவூர், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கார்களிலும், மோட்டார் சைக்கிள்களும் அதிகளவில் செல்வதை கண்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் சென்னையில் இருந்து இவ்வாறு பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதால் கொரோனா வைரஸ் நீங்கள் செல்லும் பகுதிகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளது, ஆகவே செல்ல வேண்டாம், சென்னையிலேயே நீங்கள் தங்கி உள்ள வீடுகளில் இருந்து வெளியே வராமல் பாதுகாப்பாக இருந்தாலே போதும் என்று அறிவுரை வழங்கி சென்னைக்கே திருப்பி அனுப்பினர். இதனால், எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்
சென்றனர்.

மருத்துவர்கள் அட்வைஸ்
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், சென்னையில் நோய் தொற்று ஏற்பட்டவர்கள், சொந்த ஊருக்கு செல்வதால் அங்குள்ள கிராம மக்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை, உரிய சோதனை செய்து கொண்ட பிறகே, அனுமதிக்கவேண்டும். அரசு ஊரடங்கு உத்தரவை பொதுமக்களும் பின்பற்றவேண்டும் என்றனர்.

பசி, பட்டினி தாங்க முடியவில்லை…
தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூறுகையில், சென்னையில் கொரோனா தொற்று குறையும் என எதிர்பார்த்தோம். ஆனால் வேகமாக அதிகரிக்கிறது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என, தூரத்ைதயும் பொருட்படுத்தாமல் குழந்தை குட்டிகளுடன் மாவட்டங்களுக்கு பைக்கில் செல்ல தொடங்கி விட்டோம். ஒருபுறம் நோய் தொற்று, ஒருபுறம் பசி பட்டினியால் தவிக்கும் எங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றனர்.

Tags : South India ,Chennai , Corona, Curfew, Chengalpattu Customs
× RELATED சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் உயிரிழப்பு