×

கொரோனாவால் மீண்ட ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பசுவந்தனையில் வரவேற்பு

ஓட்டப்பிடாரம்: கொரோனாவிலிருந்து மீண்ட ஓய்வுபெற்ற ஆசிரியை மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். அவரை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை டெல்லிக்கு சுற்றுலா சென்று விட்டு ஊருக்கு திரும்பியதை அடுத்து அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பூரண குணமடைந்து நேற்று வீட்டுக்கு திரும்பினார். அவரை அப்பகுதி மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வவேற்றனர். பின்னர் அவர் கூறும்போது, ‘சென்னையில் உள்ள தெரிந்தவர்களுடன் டெல்லிக்கு சுற்றுலா சென்றபோது, அங்கு அனைத்து இடங்களும் மூடப்பட்டிருந்தன.

அதனால் அங்கு ராமர் கோயிலை மட்டும் நாங்கள் தரிசித்தோம். இங்கு நான் திரும்பி வந்தபோது டெல்லி சென்று வந்ததால் தனிமையில் இருக்கவும் வெளியில் செல்ல வேண்டாம் எனவும்  என்னை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அதனை பின்பற்றி வந்த நிலையில் என்னுடைய ரத்த மாதிரியின் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வந்த அறிக்கையையடுத்து ஏப்ரல் 18ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டேன். அப்போது மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தனர்.

தினமும் எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய உணவுகளும் மிளகு பால், பூண்டுப்பால் கொடுத்தனர். மேலும் முட்டை, ஆரஞ்சு பழமும் காலை 11 மணிக்கு கபசுர குடிநீரும் வழங்கினர். மதிய உணவாக சாம்பார் சாதம், பூண்டு குழம்பு சாதம் கொடுக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டன் பிரியாணி வழங்கினர். அந்த வார்டில் நான் மட்டும் தான் கடந்த சில தினங்களாக சிகிச்சையில் இருந்தேன். செவிலியர்களும், மாவட்ட கலெக்டரும் என்னிடம் அடிக்கடி உடல் நிலை குறித்து விசாரித்தனர். தற்போது பூரணமாக நலம் பெற்று திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags : Corona ,Green Bay ,teacher , Corona, teacher, welcome
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...