×

பட்டினியால் குடும்பம் அவதி; போலீசாரின் உதவியை நாடும் தெருக்கூத்து கலைஞர்கள்: முக்கிய சிக்னல்களில் விழிப்புணர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் வேலையில்லாமல் பட்டினியால் குடும்பம் பரிதவிப்புக்குள்ளாகவே போலீசாரின் உதவியை நாடி வரும் தெருக்கூத்து கலைஞர்கள், அவர்களது உதவியுடன் முக்கிய சிக்னல்களில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் தெருக்கூத்து கலைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சுதந்திர தினம், குடியரசு தினவிழா கலைநிகழ்வில் மட்டுமின்றி மாநில அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்று தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். மேலும் மாநில அரசின் பல்வேறு விழிப்புணர்வு பணிகளிலும் அவர்கள் பங்கேற்று வந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு தேசிய ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களாக புதுச்சேரியில் உள்ள தெருக்கூத்து கலைஞர்கள் வேலையிழந்து முடங்கி உள்ளனர். இதனால் அவர்களும், அவர்களது குடும்பங்களும் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளில் தங்களை அரசு ஈடுபடுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென தெருக்கூத்து கலைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் மக்கள் அதிகளவில் கூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில்,

தெருக்கூத்து கலைஞர்களைக் கொண்டு எந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் மாநில அரசால் மேற்கொள்ள முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. இதனால் தற்போது போலீசாரின் உதவியை நாடியுள்ள தெருக்கூத்து கலைஞர்கள் ஆங்காங்கே முக்கிய சிக்னல்களில் நின்று கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இக்கலைஞர்களின் பசிக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையிலும் போலீசார், சில விழிப்புணர்வு பணிகளை அவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதற்காக வழங்கப்படும் குறைந்த ஊதியத்தில் தங்களது வயிற்று பிழைப்பை கழிக்கும் சூழலில் தாங்கள் இருப்பதாக அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கோயில்கள் திறக்கப்பட்டு தெருக்கூத்து நிகழ்வுகள் மீண்டும் எப்போது சகஜ நிலைக்கு வரும் என்ற கவலையில் அவர்களது குடும்பங்கள் உள்ளன. மேலும் தங்களுக்கு கொரோனா கால சிறப்பு சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Streetcar artists , Streetcar artists, awareness in signals
× RELATED தெருக்கூத்து கலைஞர்கள் பேரணி