×

போளூர் பகுதிகளில் ஊரடங்கால் தோட்டத்திலேயே வீணாகும் காய்கறிகள்: விவசாயிகள் வேதனை

போளூர்: போளூர் பகுதிகளில் ஊரடங்கால் கொள்முதல் செய்ய யாரும் வராததால் தோட்டத்திலேயே காய்கறிகள் அழுகி வீணாகி வருகிறது.  போளூர் அடுத்த மாம்பட்டு பகுதியில் கத்திரிக்காய், வெள்ளரிக்காய், சாம்பார் வெள்ளேரி, வெண்டைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், சுரைக்காய், புடலை, பீர்க்கன் போன்ற காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த காய்கறிகள் சென்னை கோயம்பேடு, பெங்களுரு போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக வாகன போக்குவரத்து முடங்கியதால் காய்கறிகள் அனுப்ப முடியவில்லை. இதனால் தோட்டத்திலேயே காய்கறிகள் அழுகி வீணாகி வருகின்றன.   இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:போளூர் பகுதிகளில் முள்ளு கத்திரிக்காய், வெண்டை, தக்காளி போன்ற ஒரு சில காய்கறிகளை குறைந்த அளவு சாகுபடி செய்பவர்கள், ஏதாவது ஒரு வகையில் விற்பனை செய்துவிட முடிகிறது. ஆனால் அதிக ஏக்கர் பரப்பளவில் சுரைக்காய், வெள்ளரி பிஞ்சு மற்றும் கேரளாவில் முக்கியமாக பயன்படுத்தப்படும் சாம்பார் வெள்ளரி போன்ற காய்கறிகள் டன் கணக்கில் உற்பத்தி செய்யப்படுவதால் உள்ளுரில் விற்பனை செய்ய முடியாது.

சென்னை கோயம்பேடு, பெங்களூரு மார்க்கெட்டிலிருந்து வாகனங்கள் எதுவும் அனுப்புவதில்லை. ஊரடங்கு இருந்தாலும் விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்து செல்ல தடை எதுவும் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் போதிய விலை கிடைக்காததால் உற்பத்தியான காய்கறிகளை வாங்க யாரும் முன்வருவதில்லை. இதனால் இலவசமாக கொடுத்தது போக, கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்துகிறோம். அதற்கு மேலும் உள்ள காய்கறிகள் தோட்டத்திலேயே அழுகி வீணாகி வருகின்றன.  இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் முள்ளு கத்தரிக்காயை செடியிலேயே அழுகிவிட்டால் மீண்டும் காய்க்காது. அதனை கூலிகொடுத்து அறுவடை செய்து பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறோம். ஊரடங்கால் எங்களை போன்ற காய்கறி உற்பத்தியாளர்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.  இதேபோல் மல்லிகை, முல்லை, சம்பங்கி, சாமந்தி போன்ற பூக்களும் குறைந்த அளவு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக  இந்த பூக்கள் அறுவடை செய்ய முடியாமலும், கொள்முதல் செய்ய யாரும் வராத நிலையிலும், செடியிலேயே பூத்து உதிர்ந்து அழிந்து வருகின்றன. அன்றாட கைச்செலவுக்கு உதவி வந்த பூக்கள் சாகுபடியும் கைகொடுக்காத நிலையில் அதனை பயிரிட்ட விவசாயிகள் வறுமையில் வாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : curtain garden ,Polur ,Polur: Farmers , Wasted vegetables , curtain garden ,Polur, farmers agony
× RELATED குழந்தை இல்லாததால் குடும்பத்தில்...