×

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிற்பக்கலை கூடங்கள் மூடப்பட்டதால் வருமானம் இழந்து தவிக்கும் சிற்பிகள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிற்பக்கலை கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், சிற்பிகள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூர் அடுத்த முடையூர் கிராமம் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலை பகுதிகளில் கற்சிற்ப கலைஞர்கள் அதிகம் உள்ளனர். கற்சிற்பங்கள் இங்கு ஆயிரக்கணக்கில் செதுக்கப்படுகிறது. நுட்பமான, தரமான கருங்கல் சிற்பங்களை வடிப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கும். பெரும்பாலும், சுவாமி சிலைகள் மற்றும் அழகிய  வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய கோயில்களுக்கான கற்தூண்கள் போன்றவை இங்கு வடிவமைக்கப்படுகிறது. அரை அடி உயரமுள்ள சுவாமி சிலைகள் முதல் மிக உயரமான பிரமாண்டமான சிலைகள் வரை வடிக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கிரிவலப்பாதையில் உள்ள அனைத்து சிற்பக்கலை கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், சிற்பங்களை வடித்து வாழ்க்கை நடத்திவந்த சிற்பிகள் வேலை இழந்துள்ளனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக வேலை இழந்து வருமானம் இருந்து வறுமையில் தவிக்கும் சிற்பிகள், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துள்ளனர். சிலை வடித்து கொடுப்பதற்காக ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் வைத்துள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகே சிற்பங்களை முழுமையாக செதுக்கி அதை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்து அதற்கான தொகையை பெற முடியும்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இவர்களின் வாழ்வாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் தாமதமாகும் வாய்ப்புள்ளது. எனவே, சிற்பக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு தேவையான உதவிகளை செய்து தரவேண்டும், ஊரடங்கு உத்தரவு தளர்த்தி அத்தியாவசிய பணிகளுக்கு தளர்வு அளிக்க வாய்ப்பு ஏற்படும்போது, சமூக இடைவெளியுடன் கற்சிற்பங்கள் செதுக்கலாமென அரசு அனுமதித்தால் பயனுள்ளதாக இருக்கும். அதன்மூலம், தங்களுடைய வாழ்வாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டுவர ஓரளவுக்கு உதவும் என சிற்பக்கலைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Sculptors ,closure ,Kirivalapathi ,Thiruvannamalai , Closure , sculptures, Kirivalapathi, Thiruvannamalai
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...