×

பிரசவ வலியுடன் நள்ளிரவில் நடந்து சென்ற கர்ப்பிணியை ஜீப்பில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சேர்த்த போலீசார்: சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மதுக்கூர்ரோடு பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் எஸ்எஸ்ஐ ராதாகிருஷ்ணன், முதுநிலை காவலர் கார்த்திகேயன், 2ம் நிலை காவலர் பிரகாஷ் மற்றும் ஆயுதப்படை காவலர் வினோத்ராஜா ஆகியோர் நேற்று அதிகாலை 2மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக உறவுக்கார பெண்கள் 2 பேருடன் நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியுடன் நடந்து வந்தார். இதை பார்த்து போலீசார் விசாரித்தபோது, தனது பெயர் லதா (21), கணவர் யுவராஜ் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். மன்னார்குடி ருக்குமணிபாளையம் பகுதியில் வசிப்பதாகவும், பிரசவ வலி ஏற்பட்டதால் உறவுக்கார பெண்களான சாந்தி, பாப்பாத்தி ஆகியோரை அழைத்து கொண்டு மருத்துவமனை செல்வதாக லதா கூறியுள்ளார். மேலும் பிரசவ வலி காரணமாக நிற்க முடியாமல் சாலையில் உட்கார்ந்து விட்டார்.

இதையடுத்து கர்ப்பிணி பெண்ணான லதா, அவரது உறவினர்களான 2 பெண்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றி அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். நள்ளிரவில் பிரசவ வலியுடன் நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணியை ஜீப்பில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

Tags : childbirth ,walk , Police transporting,pregnant woman,jeep after midnight,childbirth, hospitalized
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...