×

சாட்டையை சுழற்றினால் மட்டுமே தப்பிக்க முடியும்: காவல் துறையின் தடைகளை தகர்த்த சென்னை வாசிகள்: இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதால் பரபரப்பு

சென்னை: காவல் துறையினர் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வைத்திருந்த தடைகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டு எப்போதும் போல இயல்பு வாழ்க்கைக்கு சென்னை வாசிகள் திரும்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு பல்வேறு தடுப்புகளை போட்டாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்தமாக இந்த வைரஸ் கிருமிக்கு விடை கொடுக்க முடியும். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களில் ஓரளவு இந்த நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், சென்னையில் அதன் நிைலமையோ தலைகீழாக உள்ளது.

மக்கள் தொகை அதிகம் உள்ளதால் தான் சென்னையில் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்று சுகாதாரத்துறையினர் சொன்னாலும், அதை கட்டுப்படுத்தாவிட்டால் சமூக தொற்றாக மாறி வெளிநாடுகளில் ஏற்பட்ட பாதிப்பை சென்னை மக்களும் சந்திக்கும் வாய்ப்புள்ளது என்று நோய் தொற்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆரம்பம் முதலே கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என காவல் துறையினர் குற்றம்சாட்டினர். அதன் பின்பு கடும் தண்டனைகள் மூலம் பொதுமக்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். தற்போது போலீசார் எந்தெந்த ஏரியாக்களில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்கள் கண்ணில் மண்ணை தூவி பொதுமக்கள் பலர் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடர்வது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு ஊரடங்கிற்கு பின்பு வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அங்கு தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்றால், போலீசார் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக்கூடிய மெயின் ரோடுகளில் மக்கள் காலை நேரங்களில் வாகனங்களில் சர்வசாதாரணமாக சென்று வருவதை பார்க்க முடிகிறது. மக்கள் வாகனங்களில் செல்வது சென்னை சாலைகளில் கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பிடியை இறுக்கியுள்ள கொரோனா வைரசால் சென்னை மக்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் சமூக தொற்றாக மாறத் தொடங்கியுள்ளதால் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் பலருக்கு யார் மூலம் நோய் தொற்று வந்தது என்பதை கண்டறிய முடியாத நிலை உள்ளது.

எனவே சென்னையில் சமூக தொற்றாக மாறிவிட்டது என்றே கருதப்படுகிறது. சென்னையில் நேற்று மட்டும் அதிகபட்சமாக 138 பேர் நோய் தொற்றுக்குள்ளாகியிருப்பது சமூக பரவலுக்கான உதாரணமாக உள்ளது. மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியுள்ள நிலையில், சென்னைவாசிகள் பலர் அலட்சியம் காட்டி வருவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர நோய் தொற்றுள்ள தெருக்கள் சீல் வைக்கப்பட்டு காவல் துறையினரால் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பேரிகார்டுகளை தூக்கிவீசிவிட்டு மக்கள் வெளியில் அலட்சியமாக சுற்றி வருவது கொரோனாவின் பிடியில் சென்னை முழுவதுமாக சிக்கிவிடும் என்றே சுகாதார துறையினர் எச்சரிக்கின்றனர்.
    
99 சதவீத மக்கள் அரசின் அறிவிப்புகளை கடைபிடித்து ஒரு சதவீத மக்கள் கடைபிடிக்க தவறினால் கூட நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர வேண்டும். இல்லாவிட்டால் முழு அளவில் தடுக்கப்படும் வரை ஊரடங்கு நீடித்துக் கொண்டே தான் இருக்கும் என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும்.

Tags : residents ,Chennai ,policemen , Police Department, Curfew, Corona
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்