×

பத்திரிகை நிறுவனங்கள் அடுத்த 7 மாதத்தில் 15,000 கோடி இழப்பீட்டை சந்திக்கும்: நிவாரணம் வழங்க அரசுக்கு ஐஎன்எஸ் கோரிக்கை

புதுடெல்லி: `‘பத்திரிகை நிறுவனங்கள் அடுத்த 7 மாதங்களில் ரூ.15,000 கோடி இழப்பீட்டை சந்திக்கும என்பதால் நிவாரண உதவி வழங்க வேண்டும்’’ என்று இந்திய செய்திதாள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.  கொரோனா ஊரடங்கால் பத்திரிகைகளுக்கு கிடைத்து வந்த விளம்பரம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய பத்திரிகைகள் சங்கம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளருக்கு கடந்த 20ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:  பத்திரிகைகளுக்கு விளம்பரம் மற்றும் விற்பனை மூலம் கிடைத்து வந்த வருவாய் இல்லாததால் கடந்த 2 மாதங்களாக இழப்பை சந்தித்து வருகின்றன.

கடந்த 2 மாதங்களில் மட்டும பத்திரிகைகளுக்கு ரூ4,500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார நிலை மோசமடைந்துள்ள நிலையில் தனியார் நிறுவனங்களும் விளம்பரம் தர முன்வருவதில்லை. இதே நிலை தொடர்ந்தால் பத்திரிகை நிறுவனங்கள் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் ரூ,15,000 கோடி வரை இழப்பீட்டை சந்திக்கும். எனவே பத்திரிகைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள 800க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் 30 லட்சம் பணியாளர்கள், ஊழியர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

பண முடக்கம் மற்றும் வருவாய் இழப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக பத்திரிகை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே சிரமங்களை சந்தித்து வருகிறது. நியூஸ் பிரின்ட் மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத சுங்க வரியை வாபஸ் பெறவும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். இந்த வரியை வாபஸ் பெறுவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள விளம்பரத்துக்கான கட்டணத்தை உடனே வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Newspapers ,government , Newspapers, Relief, Federal Government, INS
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...