×

வரத்து குறைவு; கெடுபிடி ஒருபக்கம் காய்கறிகள் விலை திடீர் உயர்வு: சின்ன வெங்காயம் கிலோ 15 அதிகரிப்பு

சென்னை: வரத்து குறைவு மற்றும் கெடுபிடி போன்ற காரணங்களால் கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோவுக்கு 15 வரை எகிறியது. சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு சாதாரண நாட்களில் 300க்கும் அதிகமான லாரிகளில் காய்கறி வருவது உண்டு. தற்போது கொரோனா பாதிப்பை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் கடைகளை திறக்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனாவால் நிறைய பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மொத்த காய்கறி விற்பனையை தவிர மற்ற பொருட்களை விற்க தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல் சில்லறை வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை வாங்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:  ெகாரோனா பரவலை தொடர்ந்து கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள் மட்டுமே காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் பல வியாபாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 200 லாரிகளில் மட்டுமே காய்கறி வருகிறது. வரத்து குறைவு போன்ற காரணங்களால் காய்கறி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதாவது பல்லாரி வெங்காயம் ₹15லிருந்து 25, வெண்டைக்காய் 25லிருந்து ₹30, சின்ன வெங்காயம் 60லிருந்து 75, கேரட்20லிருந்து 25, சேனைக்கிழங்கு 15லிருந்து 25, காளிபிளவர் 20லிருந்து ₹25 ஆக விலை உயர்ந்துள்ளது. இதேபோல மற்ற காய்கறிகளும் சற்று விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மொத்த மார்க்கெட்டில்தான் இவ்விலை. சில்லறை மார்க்கெட்டில் மொத்த மார்க்கெட்டை விட காய்கறிகள் கிலோ 10 வரை அதிகமாக விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பீருக்காக கேரட்டுக்கு மவுசு
ஊரடங்கு உத்தரவை அடுத்து டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் போதைக்காக பல்வேறு வழிகளை கையாள தொடங்கியுள்ளனர். சாராயம் கிடைக்கும் இடத்தில் சாராயத்தை போதைக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் கள்ளச்சாராயம் விற்பனை மாவட்டங்களில் பல இடங்களில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் சிலர் அதற்கு மேலே போய் யூ டியூப் மூலமாக பார்த்து போதை பொருட்களை தயாரிக்க தொடங்கியுள்ளனர். அதாவது போதைக்காக கேரட்டை பயன்படுத்தி வீட்டில் பீர் தயாரித்த சம்பவங்களும் அரங்கேறி ெபரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நிறைய பேர் கேரட்டை வாங்கி இது போன்று பீர் தயாரிக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும், எனவே, காய்கறி கடைகளில் கேரட்டுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : arrival , Vegetables, Prices,: Small Onions, Corona, Curfew
× RELATED புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து சரிவு