×

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் சிறப்புக்குழு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்புக் குழுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், சென்னையில் தான் அதிகபட்சமாக கொரோனா நோய் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகரம் முழுவதும் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 180 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து சென்னை மாநகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி ஏற்கனவே, சென்னையில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள தண்டையார்பேட்டை மண்டலம், திருவிக நகர், ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஐபிஎஸ் அதிகாரி, வருவாய், சுகாதாரத்துறை அலுவலர் கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதை தவிர்த்து மணலி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய மண்டலத்திலும், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலத்திலும், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலத்திலும் தலா ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க  சென்னை மாநகரில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில்  5 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழு சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கும். கொரோனா தொடர்பாக அரசு செயல்படுத்தும் திட்டங்களை சென்னை மாநகரம் முழுவதும் இந்த குழுதான் மக்களிடம் கொண்டு செல்லும், இதுதவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும். சமூக இடைவெளியுடன் மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதை இந்த குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சென்னை வடக்கு மண்டலத்திற்கு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கிழக்கு மண்டலத்திற்கு பொருளாதர குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி  ஆபாஷ் குமார், தெற்கு மண்டலத்திற்கு  தமிழக போலீஸ் அகாடமி கூடுதல் டிஜிபி அமரேஷ் புஜாரி, மேற்கு மண்டலத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங், சென்னை புறநகர் பகுதிகளுக்கு கடலோர பாதுகாப்பு குழுமம்  டிஐஜி புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



Tags : IPS officers ,Radhakrishnan IAS ,Chennai ,Govt. 5 ,Govt , Chennai, Corona, Radhakrishnan IAS, 5 IPS Officials Special Committee, Tamil Nadu Govt.
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...