×

கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் குறைகிறது: பழைய நடைமுறைக்கு திரும்பும் மக்கள்

சென்னை: தமிழகத்தில், முன்பெல்லாம் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்வதென்றால் வீட்டின் அருகில் உள்ள சிறிய கடைகளிலேயே மளிகை மற்றும் காய்கறிகளை மக்கள் வாங்கி செல்வார்கள். ஆனால், சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடந்த சில வருடங்களாக சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் புதிய புதிய கடைகளாக வர தொடங்கியது. இந்த கடைகளில் மளிகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கி செல்ல முடியும். தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வு படிப்படியாக மக்களிடம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைவாக உள்ளது. பொதுமக்கள் பலரும், தங்கள் வீடுகளின் அருகில் உள்ள மளிகை கடை மற்றும் காய்கறி கடைகளிலே பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, “கொரோனா காரணமாக சமூகஇடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டியது கட்டாயம் ஆகும். பெரிய கடைகளுக்கு சென்றால் அதிகளவில் கூட்டம் இருக்கும். சாலையோரங்களில் அதிகளவில் சிறிய காய்கறி கடை மற்றும் மளிகை கடைகள் அதிகளவில் உள்ளது.

இதில், கூட்டம் இல்லாத ஏதாவது ஒரு கடைகளில் பொருட்கள் வாங்கினால் பாதுகாப்பானது என்று நினைக்கிறோம். விலையும் குறைவாக உள்ளது. அடுத்து, என்னென்ன பொருட்கள் வேண்டும் என்று ஒரு பேப்பரில் எழுதி, கடைக்காரரிடம் கொடுத்துவிட்டால் அவர்கள் போட்டு வைத்துவிடுவார்கள். சில மணி நேரம் கழித்து சென்று பொருட்களை மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன் இதே நடைமுறைதான் இருந்தது. தற்போது, கொரோனா காரணமாக மீண்டும் பழைய வாழ்க்கைக்கே திரும்பியுள்ளோம்” என்றனர்.



Tags : crowd ,Corona virus panic echo ,supermarket , Corona virus, buffer market, people, curfew
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...