×

நேர்ல போக முடியலயேன்னு வருத்தப்படாதீங்க வீட்டில் இருந்தபடி மியூசியத்தில் வாக்கிங்

*  அருங்காட்சியகத்தில் விலங்குகளை பார்க்கலாம்
* கொரோனாவால் வந்த ‘ஆன்லைன் அதிசயங்கள்’

சென்னை: வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடக்க முடியல. குழந்தைகளையும் சமாளிக்க முடியல. வார விடுமுறையில் ஷாப்பிங் கூட்டிக்கிட்டு போயி பழக்கமாயிடுச்சு. செல்போன், கம்ப்யூட்டர், டிவி ரிமோட் எல்லாம் குழந்தைங்க கைக்கு போயிடுச்சு.  அதுவும் கோடை சீசன்ல மிருகக்காட்சி சாலை, பார்க், பீச், மியூசியம்னு குழந்தைகளை கூட்டிட்டு போனா, அப்படி ஒரு குதூகலத்தை அவர்கள் முகத்தில் காணலாம். அதிலும், மிருகக்காட்சி சாலை, மியூசியத்துக்குள் நுழைந்ததும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது. ஆனா, இப்ப அதெல்லாம் முடியாதே. ரிலாக்ஸ் ஆக என்னதான் வழி என யோசிப்பவரா நீங்கள்? உங்களுக்காகவே, வந்து விட்டது ஆன்லைன் டூர்.

 அதாங்க, வீட்டுல இருந்தே வேடிக்கை பார்க்கறது. கம்ப்யூட்டர், மொபைல் போன் விளையாட்டுக்கு அடிமையாவதில் இருந்து குழந்தைகளை காப்பாற்றி, அறிவார்ந்த விஷயங்களையும், பண்டைய வாழ்க்கை முறைகளையும் அவர்கள் அறிந்து கொள்ள உதவலாம்.  கொரோனா ஊரடங்கு அறிவிப்பதற்கு வெகு முன்பாகவே, மியூசியம், மிருகக்காட்சி சாலைகளை மூடிவிட்டார்கள். வெளியில் செல்ல முடியாத மக்களுக்காகவே, கடந்த மாதம் 8ம் தேதி சூப்பர் பிங்க் மூன் அழகை ஆன்லைனில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வரிசையில், கொல்கத்தாவில் உள்ள அலிபூர் மிருகக்காட்சி சாலையில் விலங்குகளை ரசிக்க வசதியாக ‘இணைய டூர்’ வசதிக்காக மொபைல் ஆப்ஸ் அறிமுகம் செய்துள்ளனர். அதன்மூலம் பிடித்த விலங்கை ரசிக்கலாம். அதை பற்றிய கூடுதல் விவரங்களை வாய்ஸ் ஓவர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 இந்தியாவிலேயே முதல் முறையாக, 2 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்தான், விலங்குகளை ஆன்லைனில் கண்டு மகிழும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கை அடுத்து, இந்த பூங்காவின் இணையதளத்தை தினமும் 60,000 முதல் 80,000 பேர் பார்க்கின்றனராம். இங்குள்ள 14 விலங்கினங்களை தற்போது ஆன்லைனில் கண்டு ரசிக்கலாம். இதற்காகவே விலங்குகள் உலவும் இடங்களை சுற்றி 180 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. யானை குளிப்பது மற்றும் பிற விலங்குகளின் நடவடிக்கைகளை வீட்டில் இருந்தபடியே காணலாம்.

 கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகம் மிக பழமையான, பிரமாண்ட மியூசியமாகும். இதில் ‘விர்சுவல் வாக்’ வசதியை விரைவில் அறிமுகம் செய்ய போகிறார்களாம். மியூசியத்துக்கு போகாமலேயே மியூசியத்தில் நிஜமாகவே நடந்து சென்ற அனுபவம் கிடைக்கும் என்கிறார்கள். 4,000 ஆண்டு பழமையான மம்மி உட்பட பல ஆயிரம் ஆண்டு பழமையான அதிசயங்களை பார்க்கலாம். நேரில் போகாமலேயே நெருக்கமாக சென்று பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும். இது மட்டுமல்ல, அறிவியல் மியூசியங்கள் மற்றும் மையங்களையும் கூட ஆன்லைனில் ரசிக்கும் வசதி விரைவில் வரப்போகிறது.

*  நாட்டிலேயே முதல் முறையாக, சென்னையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்தான் ஆன்லைனில் விலங்குகளை பார்க்கும் வசதி அறிமுகமானது.
* ஊரடங்கு காரணமாக நேரில் செல்ல முடியாததால், இந்த உயிரியல் பூங்கா இணையதளத்தை தினமும் 60,000 முதல் 80,000 பேர் பார்க்கின்றனர்.
* கொல்கத்தாவில் உள்ள அலிபூர் மிருகக்காட்சி சாலையில் விலங்குகளை ரசிக்க  வசதியாக ‘இணைய டூர்’ வசதிக்காக மொபைல் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் ‘விர்ச்சுவல் வாக்’ வசதி விரைவில் அறிமுகமாகிறது. 4,000 ஆண்டு பழமையான மம்மி உட்பட பல ஆயிரம் ஆண்டு அதிசயங்கள் இங்கு உள்ளன.



Tags : museum ,home ,Museum at Home , Museum, curfew, Corona
× RELATED ஸ்ரீவாரி அருங்காட்சியகம்