வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்த மது வகைகளை அழிக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைப்பறைகளில் உள்ள மது வகைகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் மதுரை கிளையின் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டி.கிருஷ்ணவள்ளி அமர்வு தாமாக முன்வந்து பிறப்பித்துள்ள உத்தரவு: கொரோனா பாதிப்பால் நீதிமன்றங்களின் முந்தைய இடைக்கால உத்தரவுகள் ஏற்கனவே ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், ஐகோர்ட் கிளை பதிவாளர் கவனத்திற்கு சில விஷயங்களை ெகாண்டு வந்துள்ளார். அதில், ‘‘திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் வேடசந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பொருட்களை பாதுகாப்பதற்கான வைப்பறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால், டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சில குடிகாரர்கள் பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள சாராயத்தை திருட முயன்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  எனவே, வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு வைப்பறைகளில் உள்ள சாராயம் உள்ளிட்ட மது வகைகளை அழிப்பது குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.எனவே, வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு வைப்பறைகளில் உள்ள மதுபான வகைகளை அழிப்பது குறித்து சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்கு தேவையான ஒரு சில மாதிரிகளை மட்டும் வைத்துக் கொண்டு மீதமுள்ள மதுபான வகைகளை சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரி முன்னிலையில் அழிக்க வேண்டும்.

அப்போது வீடியோ மற்றும் புகைப்பட பதிவு செய்ய வேண்டும். அழிக்கும் பொருட்களின் விபரத்தை பதிவு செய்து அந்தந்த மாஜிஸ்திரேட் சான்றளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வழக்கு விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 1க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>