×

கிளிகளை பேச வைத்து ‘டிக் டாக்’ பள்ளி மாணவனுக்கு அபராதம்

பெருந்துறை: கிளிகளை பேச வைத்து டிக்-டாக்கில் வெளியிட்ட பள்ளி மாணவனுக்கு வனத்துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை  சின்ன வீரசங்கிலி கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன், தனது தோட்டத்தின் மரங்களில் இருந்த பச்சை கிளிகளை பிடித்து வளர்த்து வந்ததுடன், அந்த கிளிகளுக்கு பேச்சுப் பயிற்சி அளித்து, அது பேசுவதை டிக்-டாக் ஆப்பில் பதிவிட்டார். கிளி பேசுவது வைரலானது. இதைப்பார்த்த பலர், கிளிகளை துன்புறுத்துவதாக மாவட்ட வன அலுவலருக்கு புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாணவனின் டிக்-டாக் பதிவினை ஈரோடு வனசரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு செய்தபோது புகார் உறுதியானது. பின்னர், மாணவன் மீது வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி குற்ற வழக்கு பதிவு செய்து, ரூ.5000 அபராதம் விதித்தனர். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறினர். இனிமேல் கிளிகள் உள்ளிட்ட எந்த வன விலங்குகளுக்கும் தீங்கு இழைக்க மாட்டேன் என டிக்-டாக்கில் பதிவிட வேண்டும் என வன அலுவலர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து மாணவன், டிக்-டாக்கில் ‘வன விலங்குகளை துன்புறுத்த மாட்டேன். வன உயிரினங்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன். என்னைப்போல் யாரும் தவறு செய்யக்கூடாது’ என்று வெளியிட்டுள்ளார்.



Tags : school student , Parrots, tik tok, schoolboy, fine
× RELATED ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில்...