×

கொரோனா பீதியில் வீட்டுக்குள் அனுமதிக்கப்படாத கூலித்தொழிலாளி நடுரோட்டில் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் எந்தநோயும் இல்லை

* மீண்டும் மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியது
* 8 மணி நேரத்திற்கு பிறகே உடல் மீட்பு  

சென்னை: கொரோனா இருப்பதாக கருதி வீட்டுக்குள் அனுமதிக்கப்படாத கூலித்தொழிலாளி ஒருவர் சென்னை குமரன் நகரில் சாலையில் பிணமாக கிடந்தார். 8 மணி நேரத்திற்கு பிறகே உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவருக்கு எந்த நோயும் அவருக்கு இல்லை என்பது தெரியவந்தது. சென்னையில் மீண்டும் ஒரு மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஒருவரின் உடலை  அடக்கம் செய்ய விடாமல் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனிதநேயமற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உயிரை காப்பதற்காக போராடிய டாக்டருக்கு இந்த நிலைமையா என்ற கவலையும் ஒவ்வொருவரிடமும் தொற்றியது.
இந்நிலையில், சென்னையில் மீண்டும் இதேபோன்று ஒரு  மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா தொற்று இருப்பதாக கருதி 53 வயதான கூலித்தொழிலாளி ஒருவரை  அவரது உறவினர்களும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அவரை கவனிக்க யாரும் இல்லாமல் நடுரோட்டில் உயிரிழந்த சம்பவம்தான் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சை உருக்கும் இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஒரு  அறையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தவர் ரவி (53). கொரோனா வைரஸ் பரவியதை  அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ரவி தான் தங்கியிருந்த அறையை காலி  செய்தார். பின்னர் அவர் சென்னை குமரன் நகர் அருகில் உள்ள ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது சகோதரி  வீட்டில் தங்கியிருந்தார்.இந்நிலையில் ரவிக்கு கடுமையான இருமல் ஏற்பட்டது. உடனே, கொரோனா தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மருத்துவ பரிசோதனை செய்தார். அதன்பிறகு அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் ரவியை சகோதரியின் வீட்டுக்குள் அனுமதிக்க அந்த பகுதியில் வசித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அவரால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வீட்டிற்குள் தங்க இடம் கிடைக்காததால், அதே பகுதியில் உள்ள அப்பாதுரை தெருவில்  சாலையோரத்தில் கவனிக்க ஆளின்றி கேட்பாரற்று ரவி கிடந்தார். அவரை அந்த பகுதியைச் சேர்ந்த  யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. அவரை ஒரு பொருட்டாக மதித்து யாரும் அருகில்  கூட செல்லவில்லை. சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் ரவி பரிதவித்து வந்தார். இந்நிலையில், சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்தப்  பகுதிக்கு வீடு வீடாக பரிசோதனை செய்ய வந்தனர். அப்போது அதே பகுதியில்  சகோதரியின் வீட்டில் இருந்து 100 அடி தூரத்தில் கூலித்தொழிலாளி ரவி உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து சுகாதாரத் துறை ஊழியர்கள்  அதிர்ச்சி அடைந்தனர். உடனே, மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் அவர் உயிரிழந்து விட்டதால் அவரை வண்டியில் ஏற்ற மறுத்து விட்டனர். இதனால் பலமணி நேரம் ரவியின் உடல் சாலையிலேயே கிடந்தது.  பின்னர், கோடம்பாக்கம் மண்டல மாநகராட்சி அதிகாரிகளும் போலீசாரும்  விரைந்து வந்து ரவியின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில்  ஈடுபட்டனர். காலை 8.30 மணி அளவில் உயிரிழந்த ரவியின் உடல் மாலை 4.30 மணி அளவில் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு  செய்யப்பட்டது. ஆனால், ரவியின் சகோதரி உடலை வாங்க மறுத்து விட்டார்.

மேலும் ரவியின் சகோதரி  வசித்து வந்த வீட்டின் உரிமையாளரும் தனது வீட்டில் வைத்து இறுதிச்சடங்கு  செய்யக்கூடாது என்று தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக கூலித்தொழிலாளியின் உடல்  ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, என்ன செய்வது என்பது  பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். இதற்கிடையே ரவியின் உடல் பிரேத பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உள்பட எந்தவித நோயும் இல்லை என்பது தெரியவந்தது.சென்னையில் குமரன் நகரில் கொரோனா தொற்று எதுவும் இல்லாத ஒருநபர், வீட்டில் அனுமதிக்கப்படாமல் சாலையோரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



Tags : home ,panic ,Corona ,wage laborer ,coronation panic ,autopsy , Corona, wage laborer, casualty:
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...