×

1000மும் கெடைக்கல... அரசு உதவித்தொகையும் கெடைக்கல... ஊரடங்கால் வருவாயை இழந்த முடித்திருத்தும் தொழிலாளர்கள்

சென்னை: ஊரடங்கால்  முடித்திருத்தும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை  இழந்து தவிக்கின்றனர். அரசு அறிவித்த உதவித் தொகையும் பலருக்கு கிடைக்கவில்லை. அதனால் தெரிந்த வாடிக்கையாளர்களை செல்போனில் அழைத்து வீட்டுக்கு வந்து முடி வெட்டட்டுமா என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தொடரும் ஊடரங்கால்  கொரோனா ஒழிகிறதோ இல்லையோ, வேலை வாய்ப்பை இழந்துள்ள  அமைப்புசாரா தொழிலாளர்கள், எளிய மக்களின் வாழ்வாதாரம் அழிந்துக் கொண்டு இருக்கிறது.தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் முடித்திருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 90 சதவீதத்தினருக்கு  முடி திருத்துவது மூலம் கிடைக்கும்   வருவாய் மட்டும்தான். வேறு தொழில்கள் கிடையாது.  அந்த குறைந்த வருவாய் மூலம்தான்  குடும்பத்தின் தினசரி தேவைகளை கவனிப்பது, பிள்ளைகளை படிக்க வைப்பது உள்ளிட்ட இதர செலவுகளையும் சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக  மார்ச் 25ம் தேதி முதல்  தமிழகம் முழுவதும் அமலான ஊரடங்கு காரணமாக  முடித்திருத்தகங்களும்  மூடி கிடக்கின்றன. அதை நம்பியிருக்கும் தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும்  என பல்லாயிரம் பேர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 1000 ரூபாய் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, கிராமப்புறங்களில் இருக்கும் பல தொழிலாளர்கள் முடித்திருத்தும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யாமலே இருக்கின்றனர். அதனால் வருவாய்  இல்லாமல் தவிக்கும் பலரும்,  கடைகளை  தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை. அதனால் தங்கள் வாடிக்கையாளர்களை செல்போன் மூலம்  தொடர்பு கொண்டு, ‘வீட்டுக்கு வந்து முடிவெட்டட்டுமா’ என்று கெஞ்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
 
சமூக விலகலை கருத்தில் கொண்டு சிலர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும்,  சிலர் நிலைமையை புரிந்து அழைக்கின்றனர். ஆனால் போலீஸ் கெடுபிடியை தாண்டி வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாகவும்  தொழிலாளர்கள் புலம்புகின்றனர். இத்தனைக்கும் முகக்கவசம் அணிந்தும், கைகளை கழுவ சோப்பும் கொண்டுச் செல்கின்றனர். ஆனாலும்  ஒருநாளைக்கு ஒன்றிரண்டு வாடிக்கையாளர்கள் கிடைப்பது கூட சிரமாக இருக்கிறதாம். அதனால் தமிழகம் முழுவதும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான முடித்திருத்தும் தொழிலாளிகள், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரின்  பிரச்னைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும் என்பது பல்வேறு  தரப்பினரின் நியாயமான  கோரிக்கை.

வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் 1000 ரூபாய் கிடைக்கவில்லை
தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர்கள் சங்க இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.விஜயகுமார்: தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் முடித்திருத்தும் தொழிலை நம்பி இருக்கின்றனர்.  இவர்களில்  17,600 பேர் மட்டுமே  முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.  மற்றவர்கள் கிராமப்புறங்களில் உள்ளவர்கள். இப்போது தமிழகம் முழுவதும் முடித்திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டு எல்லோரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். வாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கினால் மட்டுமே பட்டினிச் சாவுகளை தடுக்க முடியும். வாரியத்தில் பதிவு செய்தவர்களில் 5 சதவீதத்தினருக்கு கூட அரசு அறிவித்த 1000 ரூபாய்  உள்ளிட்ட  நிவாரண உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை.

தொழிலாளர்கள்  துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டால் ‘அனைவருக்கும் அனுப்பிவிட்டோம்’ என்கிறார்கள். அதுமட்டுமல்ல, நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு  மறுக்கப்படுகிறது. வருவாய் இல்லாமல் கஷ்டப்படும் பலர்,   வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு சென்று முடி வெட்டும் வேலையை செய்கின்றனர். அப்படி செல்பவர்கள் பலரின் வாகனங்கள் பறிக்கப்பட்டு, வழக்குகள் போடப்பட்டுள்ளன.  இத்தனைக்கும் முகக்கவசம் அணிந்துதான் முடிவெட்ட செல்கின்றனர். இந்த 35 நாட்களில் எங்கள் வாழ்க்கை ஒடுங்கிபோய்விட்டது. இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் என்னவாகுமோ என்று பயமாக இருக்கிறது.

பசங்களுக்கு பீஸ் கட்டணும்
 முடித்திருத்தும் தொழிலாளி முருகன் செல்லையன்: தினமும் கிடைக்கும் வருவாயை வைத்துதான் குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருந்தோம். ஆனால்  இப்போது வருவாய் இல்லாததால்  ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதனால் வீட்டுக்கு போய் முடிவெட்டலாம் என்று தெரிந்தவர்களுக்கு போன் செய்து கேட்கிறேன். நிறைய பேர் வரவேண்டாம் என்றுதான் சொல்கின்றனர்.  எப்போதாவது ஒன்றிரண்டு பேர் கூப்பிடுகின்றனர்.  அவர்கள் வீட்டுக்கு வண்டியில் போனால்  பெட்ரோல் செலவு, போலீஸ் பிரச்னை என்பதால் எவ்வளவு தூரம் என்றாலும் நடந்துதான்  செல்கிறேன். சீக்கிரம் இந்த பிரச்னை தீர்ந்தால் நன்றாக இருக்கும்.  ஸ்கூல்  திறந்தால் பீஸ் வேற கட்டணும். என்ன செய்வது என்றே தெரியவில்லை.

Tags : Government ,Cadillac , Government Scholarship, Curfew, Corona
× RELATED நீட் தேர்வு முறைகேடுகள் எதிரொலி :...