×

144 தடை உத்தரவால் விற்பனையில்லாமல் வீணாகும் பூக்கள்: மானூர் பகுதி விவசாயிகள் கண்ணீர்

நெல்லை: நெல்லையில் விளைந்த பூக்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் மானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பூக்களை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். பல மாதங்களாக பராமரித்து களையெடுத்து, உரமிட்டு தற்போது பூக்கள் நன்றாக வளர்ந்து பூத்து குலுங்குகிறது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசால் கொண்டு வரபட்ட ஊரடங்கால் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் உள்ளனர். மேலும் விற்பனையில்லாததால் பூக்களை பறிக்காமல் அவை செடியிலேயே வீணாகி வருகிறது.

இதுகுறித்து மானூர் அருகே உள்ள லட்சுமியாபுரத்தை சேர்ந்த விவசாயி இளையராஜா என்பவர் கூறுகையில், வருடந்தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடப்பது வழக்கம்.
இதனால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும், இதனை நம்பி இந்த வருடமும் பல ஏக்கரில் சேவல் கொண்டை மற்றும் கேந்தி பூக்களை பயிரிட்டு வளர்த்து வருகிறோம். தற்போது அவை நன்றாக பூத்து வரும் நேரத்தில், ஊரடங்கு உத்தரவால் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தும் எந்த பலனும் இல்லாததால் பூக்கள் பறிக்காமல் விடப்பட்டு செடியிலேயே வாடி வருகிறது.

மேலும் பூக்களை சந்தைபடுத்த வாகனங்களில் எடுத்து செல்ல போலீசாரும் அனுமதிப்பில்லை. இதனால் குறைந்த விலைக்கு கூட பூக்களை விற்க முடிவதில்லை. இதனை நம்பி பலரும் கடன் வாங்கி உள்ளோம். இந்த வருடம் அதனை திருப்பி செலுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம் என்றார். எனவே விவசாயத்தினை மட்டுமே நம்பி வாழும் தங்களுக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : 144 Prohibition, sale, wasted flowers
× RELATED மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த...