×

சரக்கு வாகனங்களில் டிரைவர், கிளீனர் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை; நாகர்கோவிலுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள், டெம்போக்களில் டிரைவர், கிளீனர் தவிர வேறு யாராவது பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என சுமார் 1600 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

மாநகர் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு, பிளிச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிட பகுதியான வெள்ளாடிச்சிவிளை, டென்னிசன் தெரு சீல் வைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பால், முட்டை மற்றும் மருந்து பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள ஆணையர் சரவணக்குமார் அறிவுரை வழங்கி உள்ளார். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி நாகர்கோவில் நுழைவு எல்லையான ஒழுகினசேரி, பார்வதிபுரம், ஆசாரிப்பள்ளம் பகுதியில் மாநகர சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களிலும் கவச உடை அணிந்த பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். ஒழுகினசேரி பகுதியில் இன்று காலை கார்கள், லாரிகள், டெம்போக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லக்கூடிய மற்றும் வெளி இடங்களில் இருந்து கொண்டு வரக்கூடிய வாகனங்களில் டிரைவர், கிளீனர் தவிர வேறு யாரும் பயணிக்க கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பயணிப்பவர்களை 14 நாட்கள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள தனி வார்டில் தனிமைப்படுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை சுகாதார பணியாளர்களும் கண்காணிக்கும்படி ஆணையர் சரவணக்குமார் கூறி உள்ளார். காவல்துறை உதவியுடன் அது போன்ற நபர்களை தனிமைப்படுத்த வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags : Nagercoil , Not allowed, in Nagercoil, antiseptic, spray
× RELATED நள்ளிரவு வரை வந்திறங்கிய வாக்கு பெட்டிகள்