×

வடமாநிலத்துக்கு கொண்டு செல்ல அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு இறந்தவர் உடலை எடுத்து வந்ததால் பரபரப்பு

கோவை: வட மாநிலத்துக்கு கொண்டு செல்ல அனுமதி கேட்டு கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு இறந்தவரின் உடலை எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டம் தத்வாரா திக்காயித்நகர் பகுதியை  சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவருடைய மகன் அசோக்குமார் (38). இவர், கோவை மாவட்டம் அன்னூர் அருகே எல்லப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஒரு  பேக்கரியில் வேலை ர்த்து வந்தார். அசோக்குமாருக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பேக்கரியின் உரிமையாளர் கரிகாலன் என்பவர் அசோக்குமாரை அந்த பகுதியில் உள்ள  ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு அவருக்கு இருதய பிரச்சனை இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அசோக்குமாரின்  உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அசோக்குமாரின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால், தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் இருப்பதால், அசோக்குமாரின் உடலை வடமாநிலத்துக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆனாலும், வாகன அனுமதிக்கு, கோவை மாவட்ட கலெக்டர் பாஸ் வழங்கினால் கொண்டு செல்ல முடியும் என குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அசோக்குமாருடன் பணியாற்றிய ஆகாஷ், சரவணன், லல்லு ஆகியோர், அசோக்குமாரின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு, நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்சை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர், உடனடியாக அசோக்குமாரின் உடலை சொந்த ஊரான உத்தரபிரதேசத்துக்கு அனுப்பிவைக்க வாகன அனுமதி பாஸ் வழங்கினார். இதையடுத்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் முலம் கொண்டு செல்லப்பட்டது. கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு சடலத்துடன் திடீரென ஆம்புலன்ஸ் வந்ததால் சிறிது நேரம்  பரபரப்பு நிலவியது.

Tags : deceased ,Office ,North ,Collector , Northern Territory, Permit, Collector's Office
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...