×

டிரைவருக்கு வந்த கொரோனாவால் சிக்கல் ரூ.10 கோடி பூண்டுகள் தேக்கம்: பெரியகுளம் வியாபாரிகள் பரிதவிப்பு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே டிரைவருக்கு கொரோனா பாதிப்பு, சந்தை வழி அடைப்பால் ரூ.10 கோடி மதிப்புள்ள பூண்டுகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் வியாபாரிகள் பரிதவித்து வருகின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டியில் பூண்டு சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பல்வேறு ரகப்பூண்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்காக மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த 19ம் தேதி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர், மிஜோராம் பகுதியிலிருந்து லாரியில் பூண்டு ஏற்றிக்கொண்டு வடுகப்பட்டி சந்தையில் வந்து இறக்கி விட்டு சென்றார். தற்போது அந்த டிரைவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் வடுகபட்டி வந்து வெள்ளைப்பூண்டை இறக்கி விட்ட கடை உரிமையாளர் மற்றும் அவருடன் தொடர்பு கொண்ட டிரைவர், கிளீனர், பூண்டு மூட்டைகளை இறக்கிய லோடுமேன்கள் உட்பட 19 பேருக்கு பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பரிசோதனை நடத்தப்பட்டது.   இவர்களுக்கு கொரோனா தொற்று  இல்லை என்பது உறுதியானது. எனினும், சந்தை உள்ள சுற்றுவட்டார பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களிலிருந்து வடுகப்பட்டி கொண்டு வந்த பூண்டுகளை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பிலான பூண்டுகள் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



Tags : Coroner ,traders ,Periyakulam , Coroner's ,problem, driver, Rs 10 crore
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி