×

வனப்பாதை வழியாக தடையை மீறி ஊடுருவல் தமிழக, கேரள எல்லைப்பகுதிகளில் 30 கண்காணிப்பாளர்கள் நியமனம்

மூணாறு: தடையை மீறி வனப்பகுதிகளில் யாராவது ஊடுருவுகின்றனரா என்பதை கண்காணிக்க, தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் 30 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், மூணாறு வட்டவடை பகுதியில் இருந்து தமிழகத்திற்கு செல்ல வனப்பாதைகள் உள்ளன. வட்டவடை பகுதியில் உள்ள விவசாயிகள், கொரோனா ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டதால், அறுவடை செய்த காய்கறிகளை தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக இந்த வனப்பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதையறிந்த மூணாறு வனத்துறை அதிகாரி கொடைக்கானல் பகுதிக்கு செல்லும் முக்கிய எல்லை பகுதியான கடவரி பகுதியிலும், பழத்தோட்டம் பகுதியிலும் 3 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடவரி பகுதி வழியாக வட்டவடை பகுதிக்கு நுழைய முயன்ற 5 பேரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 3 சோதனைச்சாவடிகளிலும் 30 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி லட்சுமி கூறும்போது, ‘‘தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதிகள் மூடப்பட்டதன் காரணமாக வட்டவடை பொதுமக்கள் காட்டுப்பாதைகள் வழியாக தமிழகம் செல்வதும், மீண்டும் அதே பாதைகள் வழியாக கேரளா வருவதை தடுப்பதற்காக 3 சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகிறோம். மேலும் துணை வனத்துறை அதிகாரி சமீர் தலைமையில் ஊழியர்கள் கடவரி மற்றும் பழத்தோட்டம் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் டெண்ட் அமைத்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பகுதிகளுக்கு வந்து செல்ல அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.


தூய்மை பணியாளருக்கு கொரோனா பாதிப்பு
மூணாறை சேர்ந்த 60 வயது தூய்மை பணியாளருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவரை தனிமைப்படுத்தாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். மேலும் கொரோனா தொற்று இவருக்கு உறுதி செய்யப்பட்ட அன்றும் இவர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இவருடன் வீட்டில் இருந்த பெண் உறவினர், வட்டவடை பகுதியில் ஆரம்ப சுகாதார மையத்தில் 108 ஆம்புலன்சில் செவிலியராக பணியாற்றி வருகிறார். மேலும், அந்த பெண் நேற்று முன்தினம் வரை மருத்துவமனையில் வேலைக்கு சென்றதாக வட்டவடை கிராம பஞ்சாயத்து தலைவர் ராமராஜ் தெரிவித்தார். இதன் மூலம் வட்டவடை பகுதியில் கிராம மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

Tags : border areas ,Kerala ,Tamil Nadu ,Superintendents ,Kerala Boundary , 30 Superintendents , Tamil Nadu , Kerala border appointed
× RELATED கேரளா, லட்சத்தீவு பகுதிகளில்...