×

கொரோனா ஊரடங்கு எதிரொலியால் ரூ.50 கோடி மதிப்பிலான வேஷ்டி, துண்டுகள் முடக்கம்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு எதிரொலியால், ரூ.50 கோடி மதிப்பிலான வேஷ்டி, துண்டுகள் விற்பனைக்கு செல்லாமல் முடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், லளிகம், முக்கல்நாய்க்கன்பட்டி, நூலஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, எட்டிமரத்துப்பட்டி, ஏமகுட்டியூர், தேவசரம்பட்டி, பாளையம்புதூர், ஜருகு, பாரதிபுரம், சவுளுப்பட்டி, நாயக்கன்கொட்டாய், கம்பைநல்லூர், பாப்பாரப்பட்டி, வெள்ளக்கல், பொம்மிடி, காந்திநகர், கடகத்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேஷ்டி, துண்டு தயாரிக்கும் 5 ஆயிரம் சிறு குறு விசைத்தறி ஆலைகள் உள்ளன. இவற்றில், ஒருநாளைக்கு 2 ஷிப்ட் மூலம் மொத்தம் 4 லட்சம் மீட்டர் வேஷ்டி, துண்டுகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் வேஷ்டி, துண்டுகள் ஈரோடு, சேலம் மாநகரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், கொரோனா ஊரடங்கால், போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் ₹50 கோடி மதிப்பிலான வேஷ்டி, துண்டுகள் தேக்கம் அடைந்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் சாமிநாதன் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள விசைத்தறி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால், கடந்த ஒரு மாதகாலமாக விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சுமார் ₹50 கோடி மதிப்பிலான வேஷ்டி, துண்டுகள் தேங்கியுள்ளன. தொழிலாளர்களுக்கு கூலி வழங்க முடியவில்லை. இதனால் பட்டினி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நலவாரியத்தில் பதிவு செய்த விசைத்தறி  தொழிலாளர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. பதிவு பெற்ற விசைத்தறி தொழிலாளர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் விசைத்தறி தொழில்கூடங்களுக்கு, 3 மாத மின் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : layoffs ,prostitute ,Corona ,protests , Rs 50 crore, protests, fragments paralyzed , curfew echo, workers laid off
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...