×

மதுரையில் போலி வாகன பாஸ் வழங்கிய சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை

மதுரை: கொரோனா ஊரடங்கு நேரத்தில் வாகனங்களுக்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் மட்டுமே வழங்கி வரும் நிலையில், மதுரையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் வாகன பாஸ் வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்வுக்கு செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, இதற்கான அனுமதியைப் பெறலாம். இந்த அனுமதியை மாவட்ட நிர்வாகமே வழங்குகிறது. இதற்கென தாசில்தார் ஒதுக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், மதுரையில் தானே அச்சடித்து, கையெழுத்து, சீல் இட்டு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவர் வாகன பாஸ் வழங்கி வந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. மதுரையில் உள்ள பலருக்கும் இவர் இந்த வகை ‘பாஸ்’ வழங்கியுள்ளார். வாகன சோதனையில் இருந்த போலீசார், இந்த புதிய அனுமதி பாஸை பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து மாநகராட்சி கமிஷனருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில், சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தவர்களின் வாகனங்களுக்கு மட்டும் இந்த பாஸ், வழங்கி இருப்பதாக சுகாதார ஆய்வாளர் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : Madurai ,health inspector , Inquiry, health inspector, issued fake vehicle, pass at Madurai
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...