×

19 நாட்களாக புதிய கொரோனா தொற்று இல்லை நீலகிரி பச்சை மண்டலத்திற்குள் வந்து விடும்: கலெக்டர் நம்பிக்கை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 19 நாட்களாக புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் விரைவில் பச்சை மண்டலத்திற்குள் மாவட்டம் வந்து விடும் என்றும் கலெக்டர் நம்பிக்கை தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இடங்களில் அவர்கள் வசித்த பகுதிகள் அனைத்தும் 5. கி.மீ. தொலைவிற்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காந்தல் பகுதியில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர் வீடு வீடாக சென்று காய்கறி பைகள், முக கவசம், கிருமிநாசினிகள், பிளிச்சிங் பவுடர், சோப் உள்ளிட்டவற்றை வழங்கினார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா ைவரஸ் தொற்று ஏற்பட்ட 9 நபர்களும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை நீலகிரியில் கொரோனா பாதிப்புடன் யாரும் இல்லை. இன்றுடன் (நேற்று) 19 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலத்திற்குள் வந்து விடும்.

சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் பகுதிகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் 250 கிராம் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினிகள், முககவசம் உள்ளிட்டவை வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நீலகிரியில் உள்ள 4 பகுதிகளில் வீடு வீடாக வழங்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களும் விடுபடாமல் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாருக்கேனும் கிடைக்கவில்லை என்றால் 1077 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சில நாட்கள் இந்த கட்டுப்பாடுகள் தொடரும். பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மே 3க்கு பிறகு உரிய முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்

கூடலூரில் 5 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: கூடலூரில் அதிக பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. உடனடியாக அங்கு மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டது. இதில் அங்கு 5 பேர் மட்டுமே காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு புஷ்பகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கோவிட்-19, டெங்கு உட்பட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.  நேற்று (நேற்று முன்தினம்) பெண் ஒருவர் இறந்துள்ளார். அவர் டெங்குவால் இறக்கவில்லை. அவர் கார்டியாக் அரெஸ்ட் பாதிப்பால் இறந்துள்ளார். அந்த பகுதி முழுவதும் வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொசு உற்பத்தியாகாத வண்ணம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் நிலைகளும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவினரும் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
நீலகிரி கலெக்டர்  இன்னசென்ட் திவ்யா ஆய்வின்போது காந்தல் கீழ்போகி  தெரு, முனிசிபல்  லைன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் சுமார் 50க்கும்  மேற்பட்டோர்  தங்கள் பகுதிகளில் தூய்மை பணிகள் முறையாக நடைபெறுவதில்லை  எனவும்,  அத்தியாவசிய பொருட்களும் சரியாக விநியோகிக்கப்படுவதில்லை எனவும்   கலெக்டரிடம் முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை   தொடர்ந்து அப்பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும்,  அத்தியாவசிய  பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர்  தெரிவித்தார். அப்போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக  நின்று  கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு   அறிவுறுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து மக்கள் அங்கிருந்து சென்றனர்.

Tags : Nilgiris ,green zone , No new corona, 19 days, Nilgiris green zone, collector hope
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...