×

உத்தவ் தாக்கரே முதல்வர் நாற்காலி தப்பியது; மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த ஆணையம் ஒப்புதல்...மகிழ்ச்சியில் மகா விகாஸ் அகாதி

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணிக்கு முறையே 105 மற்றும் 56 இடங்கள் என பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இந்த கூட்டணி முறிந்தது. தொடர்ந்து, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைத்தது. மாநில முதல்வராக, கடந்த ஆண்டு நவம்பர், 28-ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.

ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மாநில முதல்வராக பதவியில் இருப்பவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.,யாக இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஆறு மாதங்களுக்குள், எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.எல்.சி.,யாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், சிவசேனா கட்சி தலைவராக மட்டுமே உத்தவ் தாக்கரே தற்போது வரை உள்ளார். இந்நிலையில், வரும் மே 27-ம் தேதியுடன், உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று, ஆறு மாதங்கள் நிறைவு பெறுகிறது. இந்த  வேலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக உள்ள, ஒன்பது எம்.எல்.சி., இடங்களுக்கு, கடந்த, 24-ம் தேதி, தேர்தல் நடந்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், போட்டியிட்டு, எம்.எல்.சி.,யாக தேர்வு பெற உத்தவ் முடிவு செய்திருந்தார். ஆனால்,  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எம்.எல்.சி., தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த, 9ம் தேதி, மும்பையில் நடந்த மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில், மாநில கவர்னருக்கான, இரண்டு எம்.எல்.சி., இடங்கள் ஒதுக்கீட்டில், ஒரு இடத்தில், உத்தவை நியமிக்க வேண்டும் என, கவர்னர், கோஷ்யாரிக்கு  கோரிக்கை விடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், கோரிக்கை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தொடர்ந்து, நேற்று முன்தினம், மீண்டும் மாநில அமைச்சரவை கூட்டம், நடைபெற்றது. கூட்டத்தில்,முதல்வர் உத்தவ் தாக்கரேவை எம்.எல்.சி,.யாக நியமிக்க, கவர்னருக்கு, இரண்டாவது முறையாக பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் காலியாக உள்ள 9 சட்ட மேலவைப் பதவியிடங்களுக்கான தோ்தலை முடிந்த அளவுக்கு விரைவாக நடத்துமாறு தோ்தல் ஆணையத்துக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால், மகாராஷ்டிரா முதல்வர் பதவியை இழக்கும் நிலையில் இருந்த உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : elections ,Uddhav Thackeray ,Commission ,Maharashtra ,Supreme Court ,election , Uddhav Thackeray escapes chair; Election Commission approves Maharashtra election
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற...