×

இனி எல்லாம் சுகமே...தொழிலதிபர்களிடம் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள  அமெரிக்காவை திரும்பவும் மீட்டு தரும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  இந்நாட்டு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். உலகிலேயே  கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா  முதலிடத்தில் உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அங்கு வைரஸ் தொற்று  உறுதியானவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 10.40 லட்சத்துக்கும்  அதிகமாக உள்ளது. அதே போல, பலியானோரின் எண்ணிக்கை 61,000த்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த தொழிலதிபர்களுடனான வட்டமேசை மாநாட்டில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: நாடு  முழுவதுமான ஊரடங்கினால் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கி  உள்ளன. அமெரிக்காவில் 2.6 கோடிக்கும் அதிகமானோர் வேலையற்றோர் நலத்திட்ட  உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். இது 3 கோடியாக உயரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரமும் ஸ்தம்பித்துள்ளது. இது கடந்த  காலாண்டில் மைனஸ் 4.8 சதவீதமாக உள்ளது. 4வது காலாண்டில் பொருளாதாரம் சீராக  தொடங்கி விடும்.

தற்போதைய சூழலில் அமெரிக்கா மிகப் பெரிய ஆபத்தை  கடந்து விட்டது. இனிவரும் நாட்கள், நல்ல நாட்களாக அமையும். சுரங்கத்தின்  முடிவில் வெளிச்சம் தெரிகிறது என்று கூறுவது வழக்கம். ஆனால் இன்று அந்த  வெளிச்சம் கூடுதலாக தெரிகிறது. உற்பத்தியின் தேவை நிலுவையில்  உள்ளது. தேவை அதிகரிப்பு நம்ப முடியாத அளவில் இருக்கிறது. அடுத்தாண்டு  அமெரிக்க பொருளாதாரத்தின், தொழிலதிபர்களின் வளமான ஆண்டாக அமைய இருக்கிறது.  பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவை திரும்பவும் மீட்டு  கொடுங்கள். இனி வரும் நாட்கள் அமெரிக்காவுக்கு நல்ல நாட்களாக அமைய உள்ளது.  நான்காவது காலாண்டு அனைவருக்கும் மிக சிறந்ததாக அமைய உள்ளது. கண்ணுக்கு  தெரியாத எதிரியினால் உயிர்களை இழந்தது போதும். கடினமான நாட்கள் நம்மை  விட்டு அகலப் போகிறது. இவ்வாறு டிரம்ப் பேசினார்.

ஊரடங்கு  தளர்வு தொடர்பாக துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில், ஹாட்ஸ்பாட்  பகுதிகளில் கூட கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனைக் கடக்கும் நாளை  நெருங்கி விட்டோம். நாடு முழுவதும் சமூக விலகலை கடைபிடித்ததால், தொற்று  பரவல் குறையத் தொடங்கி உள்ளது. இதனால் நாம் உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.  நமது உடல்நலத்தையும் நமது நாட்டின் நலனையும் பாதுகாத்து உள்ளோம். 35  மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்புநிலைக்கு திரும்பி வருவதாக  கூறினார்கள். இந்த மாகாணங்கள் வெள்ளை மாளிகை நிர்வாகக் குழுவுடன் தொடர்பில்  இருக்கின்றன. அவர்களுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது’’ என்றார்.

தொடர்ந்து 2வது நாளாக 2,500 பேர் பலி
அமெரிக்காவில்  கடந்த 24 மணி நேரத்தில் 2,502 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.  கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் பலி எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில்,  கடந்த 2 நாட்களாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில்  தொற்றினால் இறந்தோரின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடு
அமெரிக்காவில் இருந்து  தாய்நாடு திரும்ப விரும்புவோர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தை கடந்த  சில வாரங்களாக தொடர்புக் கொண்டு வருகின்றனர். இதையடுத்து இந்தியா செல்ல  விரும்புவோர் பதிவு செய்து கொள்ள இணையதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் இந்திய தூதரகம் அங்குள்ள சமூக  அமைப்புகளிடம் நாடு திரும்ப விரும்புபவர்கள் குறித்த விவரங்களை கேட்டு  இ-மெயில் அனுப்பி வருகிறது. எனினும், பயணத் தேதி குறிப்பிடப்படவில்லை. அங்கு  கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், பெரும்பாலான மாணவர்கள் நாடு திரும்ப  விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.



Tags : Trump , Corona, curfew, businessmen, Trump
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்