×

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் மே மாதம் வாழ்வா, சாவா காலக்கட்டம்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி; கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் மே மாதம் வாழ்வா? சாவா? காலக்கட்டம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவுக்கு  எதிரான போரின்போது, நாட்டின் பொருளாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க  வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுடனான கலந்துரையாடலின் போது   பிரதமர் மோடி வலியுறுத்தினார். மே 3ம் தேதிக்கு பிறகு தளர்வுகளுடன் நாடு  முழுவதுமான ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு கூறி வருகிறது. அதே  நேரம், நாடு முழுவதுமான ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில்,  ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என மக்கள் சமூக  வலைதளங்களில் தங்களுக்குள் சவால் விட்டுக் கொண்டு பட்டிமன்றம் நடத்தி  வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: நாடு  முழுவதுமான ஊரடங்கை முடிந்தால் மே மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும். இதனை  தளர்த்தினால் தொற்று பரவுதல் அதிகமாக வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக  ரயில், விமானம், பஸ் போக்குவரத்து, மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்,  வழிபாட்டு தலங்கள் நிச்சயமாக மூடப்பட வேண்டும். ஹாட்ஸ்பாட்  எனப்படும் அதிகபாதிப்புகள் கொண்ட ரெட் சோன் மாவட்டங்களின் எண்ணிக்கை 170ல் இருந்து 129 ஆக குறைந்த  போதிலும், பாதிப்பே இல்லாமல் கிரீன் சோன் பகுதிகளாக இருந்த மாவட்டங்களின்  எண்ணிக்கை 325ல் இருந்து 307 ஆக குறைந்துள்ளது. அதேபோல், அதிகம் பாதிக்காத  ஆரஞ்சு மாவட்டங்களின் எண்ணிக்கையும் 207ல் இருந்து 297 ஆக உயர்ந்துள்ளது.  இதனால், ரெட் சோன் பகுதிகளில் ஊரடங்கு மேலும் இரண்டு அல்லது கூடுதல்  வாரங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும்.  அதே நேரம், கிரீன் சோன்களில்  பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் அவர்கள் ரெட், ஆரஞ்சு பகுதி மக்களுடன்  கலப்பதை தவிர்க்கவும் வேண்டும்.

கிரீன் சோன் எல்லைகள் மூடப்பட்டு,  சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த  வேண்டும். எந்தெந்த மாவட்டங்களில் அதிகளவு கொரோனா பாதிப்பு காணப்படுகிறதோ,  அப்பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். கொரோனாவுக்கு எதிரான  இந்தியாவின் போரில் மே மாதம் வாழ்வா? சாவா? கால கட்டம். எனவே, நாடு  முழுவதுமான ஊரடங்கு மேலும் 4 வாரங்கள், அதாவது ஒரு மாதம் நீட்டிக்கப்பட  வேண்டும். கிரீன் சோன் பகுதிகளில் மட்டும் மிகுந்த எச்சரிக்கையுடன்  பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்கலாம். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.



Tags : experts ,war ,Maya ,India ,Sawa , Corona, India, Medical Specialists
× RELATED ராகுல் தொகுதியில் புகுந்த...