×

ஜிம்கள், பூங்காக்கள் மூடப்பட்டதால் ஆன்லைன் பிட்னஸ் வகுப்புகளுக்கு கிராக்கி: உடல் பருமனை தடுக்க மக்கள் முயற்சி

சென்னை: வீட்டுக்குள்ேளயே எவ்வளவு நேரம்தான் முடங்கிக் கிடக்குறது? வெளிய தலைகாட்ட முடியல. கடைக்கு போனா கூட பெரிய்ய கியூ. பொருள் வாங்குறதுக்குல்ல போதும் போதும்னு ஆயிடுது. வழக்கமா போகிற வாக்கிங்கை கூட போக முடியல என்ற வருத்தம் பலருக்கு உள்ளது.
 ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டபோது ஏதோ கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கிறதே என்று நினைத்தவர்கள், எப்போதுதான் இது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க தொடங்கி விட்டனர். அதிலும், காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக வாக்கிங், உடற்பயிற்சி என தங்களை ‘பிட்’ ஆக வைத்திருப்பவர்களுக்கு வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. ஜிம்முக்கு செல்பவர்களுக்குதான் கவலை ரொம்ப அதிகம்.

 சும்மா டிவி முன்பு உட்கார்ந்தபடி எதையாவது கொறிப்பதால், இத்தனை நாளாக கட்டிக்காத்த கட்டுக்கோப்பு கரைந்து விடுமே, உடல் பருமன் ஏற்பட்டு விடுமே என்று கவலைப்படுகின்றனர். ஊரடங்கில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அவை மூடப்பட்டுக் கிடக்கின்றன. இதுபோல் பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன. ரோட்டில் கூட வாக்கிங் போக முடியவில்லை. சிலர் மொட்டை மாடியில் நடக்கின்றனர். இது எல்ேலாருக்கும் சாத்தியமில்லை. அதோடு, எதிர்பார்க்கும் பலனையும் அளிப்பதில்லை. இவர்களுக்காகவே வந்து விட்டன ஆன்லைன் பயிற்சி வகுப்புகள். ஜிம் கருவிகள் வீட்டில் இல்லாவிட்டாலும், கருவிகள் இல்லாமல் சில உடற்பயிற்சிகளை வீட்டில் செய்ய இந்த பயிற்சியில் கற்றுத்தரப்படுகிறது.

 இதற்கு டிமாண்ட் அதிகரித்ததால், சில பயிற்சி வகுப்புகள் அதிக நேரம் நீட்டிக்கப்படுகின்றன. இதுகுறித்து பயிற்சி மையத்தினர் கூறுகையில், ‘‘ஊரடங்கு அறிவித்த பிறகு ஒரு சில வாரங்களுக்கு யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால், உடற்பயிற்சியில் ஈடுபட்டு பின்னர் விட்டு விட்டவர்களுக்கு சுறுசுறுப்பு குறைந்து விட்டது. இதை உணர்ந்ததும் உடல் நலத்தில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். ஒரு சிலர் தினமும் 2 பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கின்றனர். பயிற்சியாளர் வழிகாட்டுதலுடன் வீட்டில் இருந்தே பயிற்சிகளை செய்ய முடிவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியில் சேருவோர் எண்ணிக்கை வாரத்துக்கு சுமார் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இதனால்தான் பயிற்சி வகுப்பின் நேரத்தையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

வருவாயும் இந்த ஆண்டு துவக்கத்தை விட 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது ’’ என்றனர்.  ஆன்லைன் மூலம் நடத்தப்படும் சில வகுப்புகளில் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது. ஒரே நேரத்தில் பலர் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவரையும் அவர்கள் திரையில் காணலாம். எனவே, வீட்டில் தனித்திருந்தாலும் மற்றவர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்யும் உணர்வு அவர்களுக்கு உற்சாகம் தருகிறது.  சில ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில், செயற்கை நுண்ணறிவு முறையில் வழங்கப்படும் பயிற்சிகள், நேரில் பயிற்சியாளர் வந்து சொல்லிக்கொடுப்பது போன்ற உணர்வை தருகிறது என பயிற்சி நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. எப்படியோ, ஊரடங்கு முடிவதற்குள் உடம்பு ஊதாமல் இருந்தால் சரிதான்.

Tags : Gyms ,Parks Closed , Gyms, Parks. Online fitness.do fat
× RELATED தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள்...