×

‘பாபி’ திரைப்படம் மூலம் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் காலமானார்: பிரதமர் மோடி, அமிதாப், ரஜினி இரங்கல்

‘பாபி’ திரைப்படம் மூலம் உலகப்புகழ் பெற்றவரும், ரஜினியுடன் நடித்தவருமான  பழம்பெரும்  பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் (68) நேற்று காலை காலமானார். கடந்த சில வருடங்களாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்  ரிஷி கபூர், இந்நிலையில் நேற்று திடீரென்று அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, மும்பையிலுள்ள  மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது அண்ணன் ரன்தீர் கபூர், “புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரிஷி கபூர், சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்” என்று சொன்னார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி  ரிஷி கபூர் நேற்று பகல் காலமானார்.

பிரபல நடிகர் பிருத்வி ராஜ்கபூரின் மகன் ராஜ்கபூர். இவர் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார். பிரபல இயக்குனரும் ஆவார். இவரது மூன்று மகன்களும் நடிகர்கள். அதில் ஒருவர்தான் ரிஷி கபூர். ராஜ்கபூரின் 2 தம்பிகளான ஷமி, சஷி ஆகியோரும் பிரபல நடிகர்களாக இருந்தவர்கள். 4 தலைமுறைகள் தாண்டி இந்த கலை குடும்பம் இன்றும் இந்தி சினிமாவில் கோலோச்சி வருகிறது. அப்பா ராஜ்கபூர் இயக்கிய மேரா நாம் ஜோக்கர் படத்தில் சிறுவனாக நடித்தார் ரிஷி கபூர். வாலிபன் ஆனதும் மீண்டும் ராஜ்கபூர் இயக்கத்தில் பாபி படத்தில் நடித்தார். இதுவே அவர் ஹீரோவான முதல் படம். இந்த படமும் இதில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ‘பாபி’ படத்தில் ரிஷிகபூருக்கு ஜோடியாக நடித்தவர் டிம்பிள் கபாடியா. இவர் பிரபல நடிகர் ராஜேஷ் கன்னாவை பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து கர்ஸ், கபி கபி, கூலி, அமர் அக்பர் அந்தோணி, திவானா, சாந்தினி உள்பட பல இந்தி படங்களில் காதல் கதாபாத்திரங்களில் நடித்து இந்தி சினிமாவின் காதல் மன்னனாக வலம் வந்தார். அமிதாப் பச்சனுடன் சேர்ந்து 20 படங்கள் வரை அவர் நடித்தார். ரஜினியுடன் தோஸ்தி துஷ்மனி இந்தி படத்தில் நடித்தார். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், இவரது மகன்.  பாலிவுட் நடிகர் இர்பான் கான் நேற்று முன்தினம் இறந்த நிலையில், மீண்டும் ஒரு பாலிவுட் நடிகரின் இறப்பு திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பன்முகத்தன்மை, அன்பான குணம், சுறுசுறுப்பு, இதுதான் ரிஷி கபூர். மிகுந்த திறமைசாலியாக இருந்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ரிஷி சென்றுவிட்டார். நான் நிலைகுலைந்து விட்டேன்’ என்றார். ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், “மனம் உடைந்து விட்டேன். ஆன்மா சாந்தியடையட்டும், என் அன்பு நண்பர் ரிஷி கபூர்” என்று குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன் கூறுகையில், “நம்ப முடியவில்லை சின்டூஜி (ரிஷி கபூர்). எப்போதும் தயாராக ஒரு புன்னகையை வைத்திருப்பார். எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் அன்பும், மரியாதையும் இருந்தது. அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Rishikapur ,World ,Modi ,Amitabh ,Rajini Bobby ,Rajini , Movies, world famous, Bollywood actor Rishikapur, passed away, Prime Minister Modi, Amitabh
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்